Thursday, August 26, 2010

நூல் விமர்சனம்-செவக்காட்டுக் கதைசொல்லி

மின்னஞ்சல் அச்சிடுக PDF

தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரப் பகுதியிலிருந்தும் பலவிதமான பதிவுகள் இலக்கியத்திற்குள் வந்துள்ளன. ஆனால் இன்னும் சொல்லித் தீராத வாழ்க்கை இருக்கிறது. புதிய புதிய பதிவுகள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு வட்டாரத்திற்குள்ளும் சிறு சிறு வட்டாரங்கள் பிரிந்து கிடப்பதும் இதற்கொரு காரணம். கு. அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனும் சொல்லிய பின்னும் அப்பகுதியிலிருந்து பெரும் வரிசையில் எழுத்தாளர்கள் வந்து கொண்டேயிருக்கின்றனர். எல்லோருக்கும் சொல்ல விஷயங்களை இந்த வாழ்க்கை வைத்திருக்கிறது. கரிசல்காடு பற்றி அறிந்திருந்த நமக்குச் செவக்காடு குறித்து வே. ராமசாமி சொல்லித்தான் தெரிகிறது.

‘ஏலேய்’ தொகுப்பு மூலம் கவிஞராக அறிமுகமான வே.ராமசாமி ‘செவக்காட்டுச் சித்திரங்கள்’ வரைந்து தன்னைச் சுவாரசியமான கதைசொல்லியாக இனம் காட்டினார். கிராமம் சார்ந்த எந்த ஒரு சின்ன விஷயத்தையும் சொல்முறையில் சுவையாக்கிட முடியும் என்பதற்கு இவர் எழுத்துகள் சான்று. கோழி, ஆடு, மாடு, மனிதர்கள் எல்லாவற்றிற்கும் இந்த வாழ்வில் சம பங்குதான்.

மேட்டாங்காட்டு வேளாண்மை நிலத்தை மட்டுமே நம்பி நடப்பதல்ல. ஆடு, மாடு, கோழிகள் இருப்பதால்தான் விவசாயி வாழ்க்கையில் கைக்கும் வாய்க்கும் சண்டை போட முடிகிறது. மேட்டாங்காடுகள் எனப்படும் மானாவாரி நிலங்களாகிய பழைய முல்லை நில மக்களுக்குக் கால்நடைதான் செல்வம். அவர்களுக்கு மாடல்ல மற்றயவை. கால்நடை வளர்ப்பை முன்னிறுத்திய வேளாண்மைதான் அங்கு. விளைச்சல் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் தீவனம். விளைச்சலைப் பாதுகாப்பதைவிடத் தீவனத்தைப் பாதுகாப்பதற்கு அவர்கள் படும் கஷ்டம் பெரிது. அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை நமக்குச் சொல்லியிருக்கிறார் வே. ராமசாமி.

இந்தத் தொகுப்பில் பதினைந்து கதைகள் உள்ளன. சித்திரங்கள், விவரணைகள், சிறுகதைகள் எல்லாம் கலந்த கலவை இது. யாத்தே யாத்தே, தாயாரம்மா மாதாவே ஆகிய இரண்டும் தாயைப் பற்றிய சித்திரங்கள். உழைப்பில் மகிழ்ச்சி உண்டு. இரவும் பகலும் இடையறாத உழைப்பில் மகிழ்ச்சி காண முடியுமா? உழைப்பின் பலன் எதுவுமில்லை என்பதுடன் துயரங்களையே மிகுவிக்கும் என்றால் அதை எப்படிப் போற்ற முடியும்? தியாக சொரூபங்களாக விளங்கும் தாய்களைப் பற்றிய சித்திரங்கள் நம் வாழ்வில் தீர்வதெப்போது? மனதைப் பிசையும் இந்தச் சித்திரங்கள் கிராமத்துப் பெண்களின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை என்பதையும் சொல்கின்றன.

உரப்பெட்டியும் கஞ்சிவாளியும், டக்கர், உடைகுளத்தாள், கூமுட்டை ஆகியனவும் பெண்களைப் பற்றிய சித்திரங்களே. பொதுப் பெண்ணிலிருந்து சற்றே வேறுபடும் பெண்களைத் தேர்வு செய்து சித்திரமாக்கியிருக்கிறார் வே.ராமசாமி. டக்கர் என்னும் பெண் சித்திரம் மிக நேர்த்தி. சாகசங்களுக்கு இன்னும் மவுசு குறையவே இல்லை. எல்லாப் பெண்களும் பட்டப் பெயர்களாலேயே அறியப்படுகிறார்கள். மட்டுமல்ல, ஆண்கள், சிறுவர் எல்லாரும் அப்படியே. பட்டப்பெயருக்கான காரணத்தை வே.ராமசாமி ஒவ்வொரு இடத்திலும் விளக்கிச் செல்கிறார். எல்லாப் பெயர்களுக்கும் பின்னால் காரணமல்ல, கதைகளே இருக்கின்றன. ஆகவே வே.ராமசாமி எப்போது பெயர்க்கதையை விவரிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சம்சாரி வாழ்வில், எருமைச்சித்திரம், கரட்டான்கள் ஏன் கொல்லப்படுகின்றன? செம்மறி, வெள்ளாடு, புல் பிறந்த கதை முதலியன நல்ல விவரணைகள். வாய்மொழிக் கதைகளை மையமாகக் கொண்டும் கிராம வாழ்வின் நடைமுறைகளை ஊன்றிக் கவனித்தும் செய்யப்பட்டுள்ள இவற்றில் எழுப்பப்படும் கேள்விகள் முக்கியமானவை. செம்மறியா வெள்ளாடா என்பதற்கு என்ன பதில் சொல்ல

முடியும்? சில சமயங்களில் வெள்ளாடு பரவாயில்லை என்று தோன்றுகிறது. சிலசமயம் செம்மறி. அவரவர் மனோபாவத்திற்கும் வசதிக்கும் ஏற்பத் தேர்வு செய்துகொள்ள வேண்டியதுதான். இளம் வயதினர் வெள்ளாட்டை விரும்பக்கூடும். அதன் சுறுசுறுப்பு மட்டுமல்ல, அதைக் கவனிக்க இளம் வயதினருக்குத் தெம்புண்டு. வயசாளிகளுக்குச் செம்மறியே நன்று. ஆகத் தீர்க்கமான விடையற்ற கேள்விகள். கரட்டான்கள் ஏன் கொல்லப்படுகின்றன? பாவம் அப்பாவி ஜீவன்கள் அவை. அப்பாவிகளுக்குத்தான் எப்போதும் பாதிப்பு அதிகம். காரணம் கதையாகவும் இருக்கலாம். எருமைச் சித்திரமும் சம்சாரி வாழ்விலும் மிக இயல்பாக உருவாகி வந்துள்ளன.

ஆநிச்சியும் பூமாரியும் வே. ராமசாமியின் சாதனைக் கதைகள் என்று சொல்லலாம். சிறுவர் உலகம் கிராம வாழ்வின் துயரங்கள், சந்தோசங்கள் என அனைத்தோடும் விரிகிறது. ஆநிச்சி கதை கொடுத்த அதிர்ச்சி சில நாட்கள் என்னை விரட்டிக் கொண்டேயிருந்தது. எதேச்சையான விபத்து என்றாலும் இப்படியாகிவிட்டதே என்று தவியாய்த் தவித்தது மனம். காலை தொடங்கி மாலை வரைக்குமான சந்தோஷங்களை விவரித்து வந்து சட்டெனத் திருப்பத்தைத் தரும் இக்கதையில் வே. ராமசாமி ஓரிரு தொடர்களில் தன் நோக்கத்தை எட்டி விடுகிறார். கோணி ஊசியை அப்பா கேட்கும்போது டக்குனு ஓடிப்போய் எடுத்துத் தரணும்னு மனசுக்குள் நினைச்சிக்கிட்டாள்Õ என்று முதலில் வரும் வரி ஒன்றின் முக்கியத்துவம் பெரிது. Ôஆநிச்சியின் கண் அப்படியே ஊசியோடு வந்துவிட்டதுÕ என்னும் இறுதிப் பக்க வரியின் அதிர்ச்சிக்குத் தயார்ப்படுத்திக் கொண்டே வந்தாலும் வலி பொறுக்க முடியவில்லை.

பூமாரியும் தக்காளிச் செடியின் ஐந்து பழங்களும் கதையும் கூடி வந்துள்ளது. குழந்தை மனத்தின் இயல்புகளுக்கு மாறான பொறுப்புகளைச் சுமக்கும் குழந்தைகள் பற்றி விரிவான யோசனைகளுக்கு இடம் வைத்திருக்கும் கதை இது. வண்ணத்துப்பூச்சி பிடித்தல் பற்றிக் கதையோடு இயைந்து இவ்வளவு விரிவாக யாரும் சொன்னதில்லை. ஒரு குழந்தை இரண்டு குழந்தைகளின் இறப்புக்குக் காரணமாக முடியுமா? பெரியவளாக இருக்க எவ்வளவோ முயற்சி செய்கிறாள். ஆனால் மிக மெல்லிய கணம் ஒன்று வந்து அவள் குழந்தைமையைத் தூண்டி அழைத்துச் சென்றுவிடுகிறது. அவள் என்ன செய்வாள்? பால்யத்தைச் சீரழிக்க இந்த வாழ்க்கையில் எத்தனை கொடுமைகள்.

நவீனச் சிறுகதைக்கு பல முகங்கள். அதில் நம் மரபான கதை சொல்லல் வகை காணாமல் போகவில்லை என்பதற்கு இத்தொகுப்பு அத்தாட்சி. வே. ராமசாமி நல்ல கதைசொல்லி. இந்தக் கதைகளைப் படிப்பதைவிடப் படிக்கக் கேட்பது நன்றாக இருக்கும். கதைசொல்லிகளுக்கு பலவற்றைச் சொல்ல முடியும். செவக்காட்டு வாழ்வில் சாதிக்க என்ன பங்கு என்று தெரியவில்லை. அதிகமாக இளைஞர்களைக் காணவில்லை. இப்படி விடுபட்ட பலவற்றையும் இனி அவர் சொல்லவேண்டும்.

(பூமாரியும் தக்காளிச் செடியின் ஐந்து பழங்களும் என்ற இத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை)

பூமாரியும் தக்காளிச் செடியின் ஐந்து பழங்களும்

வே. இராமசாமி பக்: 96 | ரூ. 50

மதி நிலையம், சென்னை - 86

Thursday, August 19, 2010

புளியமரப் பொழுது

புளியமரப் பொழுதின் பகல் ஞாபகங்களின்
நிழல் நடுவே மின்னுகிறது தங்க வெயில்

எல்லாக் காலத்திலும் பறவைகள்
வெண்கலச் சத்தமிடுகிற அதன்
கிளையடியில் நிற்கிறேன் நான்

துருவிய தேங்காயைச் சிந்தியதாய்
தும்பைப் பூக்கள் உதிர்ந்த வழித்தடத்தில்
வருகிறாய் நீ

நெல்லின் மணிகளை நெய்ததாய்
இணுக்கிச் செய்த சங்கிலி மின்னாப்பை
விஞ்சுகிறதுன் கள்ளாளச் சிரிப்பு

தட்டான்கள் திரியும் பருவத்தில்
தோன்றும் வயல் வாசனைக் காற்று
தொட்டுத் தொட்டுப் போகிறது
உன்னையும் என்னையும்

மிகக் கிட்டத்தில் விலகி நடக்கையில்
உச்சியில் ஓராயிரம் தவளைகள்
கெத்கெத்தென்கின்றன

ஒரேயொரு ஆவாரம் பூங்கொத்தை
கையளித்து விடலாம் எனினும்
மிரண்ட காளையின் கழுத்து மணியாய்
கலகலக்கிறது மனசு

ஊதாப் பூக்கள் படர்ந்த உன் முற்றத்தில்
நெருஞ்சி மஞ்சளும் விரவியதைப் போல
தைக்கிறது காதலின் துயரம்

உறக்கத்தில் கருவமரத்திலிருந்து
தவறி விழுகிற கரட்டானாய்
கனவின் உச்சாணிக் கொம்பு முறிந்து
அலறி விழுந்து கொண்டிருக்கிறேன்

நீ கையேந்தித் தாங்கிக்கொள்ள
வருவாயோ மாட்டாயோ ?

வே.ராமசாமி