Sunday, October 9, 2011

cinemaa express interview


எனது "ஏலேய்"கவிதைத் தொகுப்புக்கு அறிவுமதி அண்ணன் எழுதிய முன்னுரை


சீம்பால்

ஏலே... எடுபட்ட பசங்களா... எம் பேரம்பத்திக எழுதுறதெஎல்லாம் பழுதுன்னு சொல்லி பரிகாசம் பண்றீங்களாமே!

உங்க மூஞ்சிமேல சாணிய ஊத்தி... இத்துப் போனதுன்னு சொல்லி ஏறவானத்துல சொருகி வச்ச ஈக்கிமாத்த எடுத்து சாமியாடுனன்னா  தாங்கமாட்டீங்க.

வேகாத வெயில்ல காஞ்சி கருமாயம்பட்டு... ஆடிக்காத்துல ஆட்டுப்புழுக்கைங்க அல்லோலப்படுற மாதிரி... அல்லும்பகலும் உங்களுக்காகவே உழைச்சி ஒழச்சி ஓடாப்போன எங்க வாழ்க்கதா இத்துப்போன முல்லாட்டம் இந்தக் காடுகரம்புலேயே கழிஞ்சிபோனாலும் எம்பேரம் பேத்திகளாவது ரெண்டு எழுத்து கத்துக்கிட்டு... பட்டணப்பக்கம் போயி பச்சகண்டு மேயட்டும்னு பத்திவிட்டா... இங்க என்னா உங்களுக்கெல்லாம் எழுத்து மசுருன்னு ஏகத்தலாமா ஏகடியம்  செய்றீங்களாமே!

பாம்பு புடுங்குனாலும் பத்தியம் பாக்காம... தேளு கொட்டுனாலும் தேச்சிவுட்டுட்டு... பாடுபட்டு பாடுபட்டு உங்க பட்டாசாலையில கொண்டுவந்து கொட்டக் கொட்ட... அவுச்சி ஆவாட்டியாக்கிக் குந்தாணியில போட்டு குத்திகுத்திக் கொடுத்தா... பொடச்சிக் கொடுக்க சொல்லி படைக்கிறமாதிரி பாவன காட்டிப்புட்டு... பருப்பும் நெய்யுமா போட்டு நல்லா மூச்சுப்பிடிக்க முழுங்கிட்டு... அதக்கி அதக்கிக் குசுவ விட்டுக்கிட்டே நீங்க எழுதனதானடா இலக்கியங் கிழக்கியம்னுட்டு எகிறிக் குத்திக்கிறிங்க.

எங்ககிட்ட இல்லாத இலக்கியமாடா உங்ககிட்ட... மாருலருந்து பாலு சுரக்கற மாதிரி மனசிலேருந்து பாட்டு சுரக்கற பரம்பரடா எங்களது.

நடவுக்கும் அறுப்புக்கும் நாந்துக்குனியாத... நாத்து புடுங்கவும்... மொழி புடிக்கவும் வயல்ல எறங்காத உங்களோட எழுத்து மசுரெல்லாம்... எங்கக்குலவ பாட்டுக்கிட்டேயும் நடவுப்பாட்டுக்கிட்டேயும் எந்த வகையிலடா எதிர்ல நிக்கமுடியும்?

ஏதோ  விமர்சன  வெங்காயமாம்...

எங்க பேரம்பேத்திக கூழுக்காச்சி ஆறப்போட ஈயத்தட்டுல எதவா கொட்டுனா... இதெல்லாம் பீ பீன்னு சில 'செனப்பன்னிக' சிலுப்பிவுட்டுக்கிட்டு சிரிக்குதுகளாம்!

ஏலே... உங்க எழுத்த நீங்க எழுதிக்கிங்கடா... எங்க எழுத்த எங்கள எழுதவுடுங்கடா... இதெல்லாம் எழுத்து இல்லடா. எங்களோட பாட்டன்பாட்டிக... அப்பன் ஆத்தாளுக ஆண்டாண்டுகாலமா உழைப்போடையே உலர்ந்துடாம கொண்டுக்கிட்டுவந்து எங்ககிட்ட கொடுத்த ஈரம்டா...

எம் பேரன் வே. ராமசாமி இதுல எழுதியிருக்கிறதெல்லாம் வேர்க்கவிதைகள்டா. வேர்கள் இறக்கி... வீரனார்க்கோயில் காடு மாதிரி பச்சகட்டி பம்மி நிக்குற இந்த எழுத்துக்குள்ள நொழஞ்சி பாருங்க. வெளிய வர்ற வழி தெரியாம விழி பிதுங்கிப் போயிடுவீங்க.

உடல் சுக்கென
வற்றி வதங்கிய
பெருந்தெய்வமென்
அன்னை

பனைதாங்கும்
வெப்பம்
தான் தாங்குமவள்
சரீரம் பூத்த வியர்வையையும் விடாமல்
நக்கி உறிஞ்சும்
கொடுன்சூரியன்...

கைக்குக் கிடைப்பானெனில்
இவ்
அரிவாளால்
துண்டு துண்டாக
வெட்டித் தரிப்பேன்
ஒரு
சுள்ளி போலே...

இப்படி எழுத ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டும். வாழ்ந்திருக்கிறான் வே. ராமசாமி. வாய்க்குமோ...    'ஞானங்' களுக்கு இவையெல்லாம்!

இளைங்கர்களற்று
வெறிச்சோடிக் கிடக்கிறது
தெருமுனைத் திண்ணை

ஏன்... ஏன்...   வேளாண் விஞ்ஞானிகளென்று   உங்களிடம் எம் வயல்வெளி அறிவை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி நின்றதால்...


இன்று... எம் விதைகள் மலடு... எம் வயல்கள் மலடு... எம் ஆறுகள் மலடு. எம் மழை...  மலை அனைத்தும் அனைத்தும் மலடு.
அதனால்தான்

சொல்லுங்கள்
தேநீரகத்தில்
ஊரில் மழைபெய்த செய்தி படித்து
அழாமல் இருக்க முடியுமா...

என்று அழுகிறான் வே. ராமசாமி.

நம்பிவந்த நகரம்... வெம்பிப் போகச்செய்த வேதனையை...

பசிவாடை வீசும்
நகரத் தெருக்களில்
அலைந்த கால்களில்
பிசுபிசுக்கும் நிராகரிப்பு

என்று பதிவு செய்கிறான்.

ஒரு சிறுகுழந்தை
பிறிதோர் குழந்தைக்கு வழங்கும்
முகாந்திரமற்ற
முத்தச் சுவையுடன்
ஒருத்தரையும்
அன்பு செய்ய முடிவதில்லை...

என்றும் தன் ஈரம் வாங்க எவருமில்லையென்ற தவிப்பில்... இந்த நகரம் தந்த  மனச்சுமையை தமிழில் இறக்கி வைக்கிறான்.

வெப்பங்குடித்து
மேனி சுருங்கி
கிழவியாயின தாவர இலைகள்...

வே. ராமசாமிக்கென வாய்த்த... உத்தி பிடித்துக்கொண்டு விளையாடுகிற நடை.

கொழித்துச்
செழிக்கிறது வாரியம்
நலிந்து போனது
விளையாட்டு...

இதற்குள்ளாக பேசப்படுகிற அரசியல் பெரிது.

இன்று
பசிய சோள நாற்றில்
வாய் வைத்து
அலகில் அறைவாங்கிய
பசுவின் துயரோடு
பாதையில் போகிறேன்...

படித்தது உள்ளுக்குள் ஊறித் தளும்புகிறது கண்ணீர்.

தைப்புராக்களின் கேவலில் நிறையும் கிணறாக இத்தொகுப்பு நெடுக எம் மக்களின் வாழ்வே நிறைந்து வழிகிறது.

முன்னத்தங்கால்
கிளைபோட்டு
பின்னத்தங்கால்
தரையூன்றி
அவ்வெள்ளாடு குடிப்பது
இலைகளின்
முலைப்பால்...

ஓவியர் மருதுவிடம் கொடுத்து இந்த வரிகளை ஓவியமாக்கிப் பார்க்கவேண்டும்.

உழுது முடித்த
ஓய்வில்
தகப்பன்
தயாரித்துத் தந்த
பூவரசு
இலைச் சுருட்டில்
பீப்பீ எழுப்பும்
அம்மணச் சிறுவனின்
இசைக்குப்
பதிலறுக்கத்தான்
காலமெல்லாம்
கூவித்திரிகிறது குயில்...

இயற்கையோடு இயற்கையாய் வாழ்ந்த நம் இனத்தை இனங்கான இக்கவிதை போதும்.

ஆமணக்கு
முத்துபோலும்
பொடித்தவளை

பெருவிரல் நகமாய்
சின்னநண்டு

முட்டையோட்டின்
ஈரான்காயாத
கோழிக் குஞ்சு

கவிதை...

என் ஆசான் அப்துல் ரகுமான் படித்தால்... தனிமையில் படித்தாலும்.... அவரிடமிருந்து அடடே... சொல்லவைக்கும் அழகு!

கார்காலத்தில்
எல்லா வீட்டின்
கதவுகளும்
ஆகுதி நடத்தும்
வேர்பிடித்து
வளரும் பசுமரமாக...

இப்படி... இப்படி...   எழுதி... எழுதி...  தவளைகளை பெய்கிற மழை... கொக்குகள் காய்க்கிற மரங்கள் நினைந்த மலையான்குளத்து வாழ்வை சுண்டக்காய்ச்சி சுவையான சீம்பாலை உங்கள்முன் நீட்டி இருக்கிறான்.

சுவையுங்கள்.

கிளிக்கூட்டம் விரட்டவும்
மனசிராது....

என்கிற எம் பேரன் வே. ராமசாமியோட மனச... என்னோட பேச்ச கேட்ட கோபத்துல காயப்படுத்திடாதீங்க.

அன்புடன்
அறிவுமதி.