Sunday, March 7, 2010

வெள்ளைமுடி அழகி

சேற்று வயலில்
கைக்களை பறித்து
நகங்கள் பத்தும்
சாகக் கண்டாள்

கோடையில் வெடித்த
மின்னலை எடுத்து
பித்தக் கால்களில்
பதுக்கி இருந்தாள்

கோழியைக் கவ்வும்
கீரியைத் துரத்தி
உறக்கமில்லாத
விடியலைக் கடந்தாள்

ஒத்தையடிப் பாதையில்
நடந்து நடந்து
ஒத்தையில் வரைந்தாள்
ஒத்தையடிப் பாதை

முந்தியில் முடிந்த
விதைகளையூன்றி
பருவம் பிறளா
உலகை நடத்தினாள்

நூறு மல்லிகைசெடியிலும்
ஒருமொட்டும் தப்பாமல்
உன்னிப்பாய் எடுத்து
சந்தையில் சேர்த்தாள்

முற்றிய வயதிலும்
புஞ்சைக்கு போவதில்
முந்தத் துடித்தாள்
முயலின் வேகத்தை

முற்றும் நரைத்தும்
நெஞ்சுக்கு வைரமேற்றி
வாழவைக்கிறாள்
அம்மா என்கிற
வெள்ளைமுடி அழகி

வே.ராமசாமி

No comments: