Monday, April 12, 2010

கவிதைகள்

புறா வாழ்வு

எச்சங்களால்
அறியப்படும்
அதன் இருப்பிடம்
சிறுபிள்ளைகளும்
கல்லெறியும் படியானது

பழைய சோற்றை
கிணற்றுள் வீசும்
சிறுசப்தத்திற்கும்
அஞ்சிப் பறக்கும்
அவற்றின் பதற்றம்
எவ்வுயிரும் அறியாதது

முட்டைகளை
நீரில் தவறவிட்டு
மலங்க மலங்க
மின்கம்பத்தில் முழிக்கும்
நாள் முழுதும்

பொரித்ததானாலும்...
கிணற்றின் இடுப்பில்
கிளைத்த மஞ்சனத்திக்கு
தீயிடும் போதோ
உள்விழுந்த தென்னோலைகளை
அகற்றுகையிலோ
அப்பாவின் கண்பட்டு
குழம்புக்கு வரும்
குஞ்சுகள்

மறுநாள்
தாய்ப்புறாக்களின்
கேவலில் நிறையும்
கிணறு-
வே. ராமசாமி

மழைக்குறிப்பு

சிலசமயங்களில்
மழையென்று
சரியாக ஏமாற்றிவிடுகிறது
தென்னையின்
கீற்றுச் சலசலப்பு

சன்னலை
எதற்காகத் திறக்கிறார்கள்
மழை ரசிக்கவா
ஊர்ஜிதப்படுத்தவா?

கிழிசலில்லாத
குடையிருப்பவர்களுக்கு
பெருமைக்குரிய
மழைப்பயணம் வாய்க்கலாம்

பெருங்குரலெடுத்து
மழை பொழிகையில்
பட்டாம் பூச்சிகள்-எங்கு
பதுங்கி இருக்கும்?

மழைக்கான நிகழ்வு
சாத்தியப்படுகிற
இதே பூமியில்தான்
அணுகுண்டுகளைப்
பதுக்கி வைத்திருக்கிறார்கள்

இந்த வருட மழையனுபவம்
புதிதாகக் குழந்தை பெற்ற
அக்காவுக்கு எப்படி இருக்கும்?

அமிருதவருசினி வாசிக்க
அவிழ்கிறது மேகமென்றால்
மழைப்பாடல் எந்த
ராகத்தில் நிகழும்?

துருவிப் துருவிப்
பார்த்தாலும்
இருளில் பெய்த மழையின்
ஒரு துளியும்
கண்ணில் படவில்லை
- வே. ராமசாமி

இலைப் பிரகடனம்

முன்னதாக
இலை
கடலாகியிருக்க வேண்டியது

வானின் இடத்தில்
வந்திருக்க வேண்டியதும்
அதுவே

ஒருமலை போல்
விம்மிப் புடைக்க
இயற்கை
பச்சை இலையைத்தான்
தேர்வு செய்திருக்கும்

நதியெனக் கிளம்பிய
இலையொன்று
ஆதிநாளில்
ஸ்தம்பித்து திகைத்த போது
முதுகினடியில்
நரம்பு ரேகைகளைப்
பெற்றுக் கொண்டது

புளிச்சிக் கீரைகள்
தலைவிரித்த
தோட்டத்தினுள் நின்று
அறிவிக்கிறேன்
இலைகளே வானம்

முன்னாளில்
ஆத்தா-என்
தலையில்பேன் பார்த்த போது
விரல்களாய் நீண்டன
இலைகள்

முன்னத்தங்கால்
கிளை போட்டு
பின்னத்தங்கால்
தரையூன்றி
அவ்
வெள்ளாடு குடிப்பது
இலைகளின்
முலைப்பால்

இந்த
அலைவீசும் வாழ்வில்
இப்படி இலைகளில்
ஏறிக் கொண்டுதான்
அவ்வப்போது
தப்பிக் கொண்டிருக்கிறேன்

II

இலைகள்
என்னை
லேசில் விடுவதாயில்லை

கனவில்
நுழைந்து விட்டன

அழகிய நடிகையென
தன் ரூபங்களை
காட்டி மயக்கின

ஓரிலையில்
கோடிப்பக்கங்கள் உள்ள
புத்தகம்ஒன்ற
புதைந்திருந்தது

எனது
நரம்பெல்லாம்
இலைகள்அரும்பின

விடியலில்
என்னுடல்
கொடியாகி இருந்தது

இடையன்
தன் ஆடுகளுக்கு
என்னை
கட்டுவானாக
- வே. ராமசாமி

வேர் பூத்த கவிதை


உடம்பில்
சில கவிதைகள்
ஒட்டிக்கொண்டுள்ளன
ஒட்டுப்புல் போல

கண்
காது
மூக்கு
கால்
வயிறு என
ஆங்காங்கே
சில பாடல்கள்
பதிவாயுள்ளன

எங்கே தொட்டாலும்
கவிதைகள் தங்களை
வாசிக்க ஆரம்பித்துவிடும்

பாடல்களை
தங்களை முழங்க
ஆரம்பித்துவிடும்

கனவிலும் உறங்காமல்
உற்பத்தியான
கவிதையொன்று
மூளையில் கிளைத்துச்
செழித்தது

நெடுநாளாக
ஊறிக்கிடந்த
வரிகள் வேர்பிடித்து
குடல் பின்னியிறுக்கியதில்
வெளித்தள்ளி தொங்கியது
நாக்கு

அதன்
மேலும் கீழும்
அச்சாகியிருந்தன
சில-

ராமசாமி வே.


மழை வேட்டல் II

கடைசியில்
மழைபெய்தே விட்டது

வேப்பமரத்தின்
கிளைவரை
பெருகியது நீர்

பேராசை கொண்ட
மரம்
கிளைநுனியில்
தண்ணீர் குடிக்கிறது

பஞ்சிட்டானின் சிறகு
மாதமொன்றாகியும்
உலரவில்லை

சிறகு கோதியே
களைத்தன
புள்ளினங்கள்

வொவ்வொரு
சொட்டையும் விடாமல்
பருகினவென் கண்கள்

மழைநீரில்
காகிதக் கப்பலென
கிளம்பி விட்டன
அவை

குளத்தில் மிதக்கிறது
என் சடலம்

பிணத்தை
விரைவில்
அப்புறப்படுத்தாவிடில்
நான்
குளத்தைத் தூர்த்துவிடுவேன்

- வே. ராமசாமி

சிறகு

முன்னம் ஒருநாள்
காதலின் வானம் விலாவில் முளைத்தது
சிறகில் பயிர் செய்தோம்
வண்ணமயமான பூக்களை

றெக்கைகளின் நரம்புத்தடத்தில்
வேர்பிடித்துக் கிடந்தது ஆன்மம்

தாவரங்கள் பற்றிய விசாரணையின்
அடிவாரத்தில் பதுங்கிச் செழித்தது காதல்

சிறகுகளின் பெருமிதத்தில்
வாழ்வின் முனைகளின் குடைசாய்ந்து
கிடந்தேன்

இவனுக்கேன் இம்மாம் பெரிய சிறகுகள்
என
காதலை முறித்துப்போட்டார்கள்.

நானுங்கூட
அறத்தின் நீள அகல உயர விழுமியங்களில்
சிறகுகளைப் பொருத்திச் செதுக்கினேன்

இப்போது
காதல் உதிர்ந்துவிட்டது

உதறமுடியாத பெருங்கனத்துடன்
படர்ந்துகிடக்கிறது சிறகு.

- வே. ராமசாமி

பிடிமானம்

அற்புதங்களின்
பிடிமானத்தோடு கொஞ்சம்
சமாதானமாய்க் கழிகிறது
காலம்

கருவேலமரப் பிசினாய்
ஏதாவதொன்றுடன்
ஒட்ட வேண்டியிருக்கிறது

இறுகப் பற்றினாலும்
தோள் துண்டெடுத்து
உதறிவிட்டுப் போனாலும்
நிகழ்ந்துவிடும்
அபாயம் மிக்க பிரிவு

ஓணானின்
ஆராயுங் கள்ளத்துடன்
வொவ்வொன்றிலும்
தலைநீட்டிப் பார்க்க
வேண்டாம்தான்

ஆனால்
விதவிதமான கண்ணிகளோடு
திரிகிறவர்களை
என்ன செய்வது?

எவனும் எவன் கழுத்திலும்
சுருக்கு மாட்டலாமென்ற
அச்சத்தில் இறுக்கிக் கொள்கிறார்கள்
அவரவர் சங்குகளை

ஒரு சிறுகுழந்தை
பிறிதோர் குழந்தைக்கு வழங்கும்
முகாந்திரமற்ற
முத்தச்சுவையுடன்
ஒருத்தரையும்
அன்பு செய்ய முடிவதில்லை

- வே. ராமசாமி

வாழ்வறு நிலை

மனதின்
சல்லி வேர்களில்
விழுந்து கொண்டேயிருக்கும்
நிகழ்வுகளின் கோடரி

கனவுப் பொதியில்
தீப்பற்றியெரிய
கேட்பாரற்றுக் கூச்சலிடும்
ஆன்மா

பசிவாடை வீசும்
நகரத் தெருக்களில்
அலைந்த கால்களில்
பிசுபிசுக்கும் நிராகரிப்பு

துயர வெளிகளில்
நைந்து நைந்து
துளிர்விடத் தயங்கும்
நம்பிக்கை

திசைகளெங்கும்
அறைவாங்கி
துடித்துவிழும்
உயிர்ப்பறவை

இக்கவிதையே
பற்றுக் கோடானால்
கழியுமோ
பிறவிப் பெருங்கடல்

முளைக்குமோ கருகுமோ
பாலை மணலில்
புதைந்த விதையாய்
கிடக்கும் வாழ்வு

- வே. ராமசாமி

மழை வேட்டல்

நின் உதடு
பெரிது

பிரபஞ்சம் முழுவதும்
முத்தமிட ஏதுவானது

இங்கே
விசும்பும் கணம் நோக்கி
வேர்முடிச்சுகளில்
கண்ணீர் வாங்கி
புழுங்கி அழுகிறது நிலம்

வெப்பங்குடித்து
மேனி சுருங்கி
கிழவியாயின தாவர இலைகள்

நீர் வேட்கையில்
வியர்வைத்துவாரம் அடைந்து
நாற்றமெடுக்கிறது
மனிதர் குருதி

தகிக்கும் கதிரொளியில்
உன் நீர்மைத் துளிகளைக் கண்ணுற்று
கழுத்தை நெரித்து பெய்யச் சொல்ல
இயலாத நான் -

வாடிய புளியமரத்தடியில்
ஈரத்துணியாய் என்னை
கசக்கிப் பிழியுமுன்

நீ
பொழி
பேரோலமெடுத்து
முத்தமிடு!-

வே. ராமசாமி

நெருஞ்சிச்சாமி

மாவுருண்டைக்குப்
பேர் போனது
வடக்கத்தி அம்மன்

மாவில்
கண் வைத்து
அருள் கொண்டாடுகிறார்
நமது
சாராயங்குடித்த
சாமியார்

ஆடிய ஆட்டத்தில்
நெருஞ்சிமுள்ளில்
தவ்விக்
குதித்தும் விட்டார்

பின்பு
ஆவேசம் போன
இடந்தெரியாமல்
உள்ளங்கால்களை
தரையில் தேய்த்து
ஆடி மேற்செல்கிறார்

- வே. ராமசாமி

மலையாங்குளம் 1


தவளைகளைப்
பெய்கிற மழை

கொக்குகள்
காய்க்கிற மரம்

சாரைகள்
கண்ணுறங்கும்
நெடுவயல்

தானியம்
நிறைந்த குதிர்

தோள் தூக்கிச்
சுமக்கும்
தாய்மாமன்

காசுதருகிற
அத்தை

தாயமிடும்
அவள் மகள்

தம்பியின்
ஈரக்காலில் இறங்கிய
கருவமுள்ளை
கிளறியெடுக்கிற
அக்கா

ஊர்தாங்கி
நிற்கிற ஆல்

கரிந்து திமிர்ந்து
மேற்பார்வைசெய்யும்
பனைகள்

கைகாட்டி
முன்னேகும்
வரிசைப்
புளியமரங்கள்

வாழைத் தோப்பின்
இலை விரிந்து
மூடிய வானம்

தரைக்கு
ஒருசாண் மேலே
நேர்க்கோட்டில் பறந்து
ஈசலை
இரையெடுக்கும்
தைலான்

தானியம்
உடைத்து உடைத்து
பூமி சுற்றாவிட்டாலும்
தான் சுற்றும்
திருவைக்கல்

வடக்கே
வாழவந்த அம்மன்

தெற்கே
ஆனைக்காரன்

மேற்கே
கூடாரத்தம்மா

கிழக்கே
உச்சி உடையார்

நாலுபுறமும்
குளங்கள் சூழ்ந்தாலும்
ஒன்றின் பெயர்
ஊருக்கானது
மலையாங்குளம்

வே. ராமசாமி
-

மலையாங்குளம் 2

எருக்கிலையும்
இலந்தையும்தவிர
எல்லாமிழந்தது
பூமி

தீனியில்லாத
சினைப்பசுவொன்று
குப்பையில்
ஊதிச் செத்தது

ஊர்
காக்கிற அம்மன்
கட்டமன் ஆனாள்

ஆல்
தங்காத ஊரில்
அருகம்புல்
தங்குமா?

பனை
தங்காத ஊரில்
பச்ச நெல்லு
தங்குமா?

சொலவடை
சொல்கிற
பெருசுகள் மனசு
கூமுட்டையென
கலங்கிக் கிடக்கும்
பிள்ளைகள்
வாழ்வு நினைத்து

அபலை
கண்ணென
மஞ்சள் பூத்தது
வெள்ளாட்டின் கண்

முன்னோர்
ஆத்மா வாழும்
பெருமரங்கள்
மொட்டையாகின

ஊரில் பாதி
கிரையமானது
ஜெயவிலாஸ் மில்லுக்கும்
ஈரோட்டுக்காரனுக்கும்

உச்சந்தலை
ஊன்றி நின்றாலும்
தலை நனையாத
கிணறுகள் காய

தரைதளிர்த்துக்
கிடக்கின்றன
பரம்பரை நிலங்கள்

எலிப்பொந்தில்
இறங்கிய நீரென
புகுந்த வறுமையில்
திசைக் கொருவராக
தெறித்தோடினர்
வாரிசுகள்

பழகிய காடுகளில்
ஆவிவெந்து
அலைகிறார்கள்
அன்னைமார்கள்

- வே. ராமசாமி

நதியாடல்

உதட்டு முத்தம் பட்டு
நழுவியோடுகிற தேவதையின்
வண்ணம் நீலம்

அவளின்
உள்ளிறங்கி நீராடும்
என் தலைமீது செல்லும்
மாநதி

நடந்து வந்த பாலை
தெப்பமாகித் தெவங்கும்
இவ் ஒட்டகம்

வெங்காட்டின்
சிறு பறவைக்கு
நீர்ச்சுனை
இடதில் ஒரு சிறகு
வலதில் ஒரு சிறகு

குழி நீரில்
குளித்த கருங்காகம்
சமுத்திரத்தின் கிளையில்
கட்டியது கூடு

நரம்புகள் தோறும்
நதிகள் ஊறி
திசைகள் குழம்பி
மோதித் தெறிக்கிறது
துளி

வான் மட்டும் மேவி
மேலும் பரவும் தண்ணீர்

இப்போது
பிரபஞ்ச நீர்மத்தில் மிதக்கிற
நிலா நான்.

- வே. ராமசாமி
ஏன்

சில முகங்களை
கண்டவுடன்
எரிச்சல் வருகிறது

அம்மா
பார்த்து வைத்திருக்கிற
பெண்னெனில்
அறவே பிடிப்பதில்லை

பட்டணம் வாத்தியாரின்
மேசையிலுள்ள
பூமி உருண்டையை
ரெண்டா
உடைக்கத் தோன்றும்

அதுவும் குறிப்பாகத்
தேங்காய்மாதிரி

இப்படியாப்பட்ட
எண்ணங்கள்
எங்கிருந்து
வருகின்றன

ஏன்
வருகின்றன?-

வே. ராமசாமி

நூற்றாண்டுத் தாகம்

நீங்கள் நீரில்
உழவு செயபவர்கள்

நதிப்புனலில்
சவப்பெட்டி தயாரித்தே
பழக்கப்பட்டவர்கள்

சம்சாரிகளின்
கால் வெடிப்பாய்
ஆறுகிடந்தபோது
உங்களில் ஒருவனையும்
காணவில்லை

பச்சை ஆட்டுப்புழுக்கை
இரும்பாய்க் காய்ந்த கோடையில்
துளி நீரில்லை எமக்கு

முழுதாய் குடல் நனைய
வழியின்றி அலறும்
பசுவின் குரல் கேட்டதில்லை
உம் காதுகள்

எம் ஆத்தாக்கள்
அலற அலற
சொசைட்டிக் கடன்கேட்டு
கதவு உடைத்த
நீங்கள் கூப்பிட்டா
புறப்பட்டது நதி

உம் உள்ளங்கையில்
ஒரு போதுமில்லை
மேக அயனிகள்

நதி திரட்டி வந்தது
மழைத்தாய் மட்டும்

பின்னொரு நாளில்
கசியாமல் நீர்தேக்க
பெருந்தன்மையுடன்
திறந்து கொள்ளும்
மதகுகள் மேவி
புரளும் வெள்ளத்தில்
தீருவதில்லை
எம்நூற்றாண்டுத் தாகம்.

- வே. ராமசாமி

பம்பரம்

ஒருபோதும்
பேருந்துப் பயணம் செய்ய
வாய்ப்பேயில்லாத
கலைவாணன் பயல்
ஆணி மினுமினுங்கும்
பம்பரத்தை
மல்லாக்க வைக்கிறான்
கோயில்பட்டி ரோட்டில்

- வே. ராமசாமி

வண்ணத்துப் பூச்சிகள் துரத்த ஓடியவன்

கொலைக்கரங்கள்
வாய்த்த பால்யம்
எனது

செவக்காட்டில் மூச்சுமுட்ட
அம்மா புடுங்கி வந்த
புளியங்குறண்டியால்
பட்டாம்பூச்சிக்குக் குறிவைப்பேன்

ஏதேனும்
துத்திப்பூவில் தேனுறிஞ்சுவதை
பதுங்கிச் சென்று அறைகையில்
மெளனஓலமிட்டுச் சரியும்

துண்டிக்கப்பட்ட பல்லிவாயாய்
துடிதுடிக்கும் அதன் சிறகு பிய்த்து
மீண்டும் முளைக்குமோவென
கடாப் பெட்டியிலடைக்க
எறும்புகள் மொய்த்துச்
செத்துக்கிடக்கும் மறுநாள்

மூணுவேளைச் சோற்றுக்கென
வேதப்பள்ளியில் சேர்க்கப்படும்வரை
வெள்ளை மஞ்சள் சிவப்பு என
அவற்றின் பின்னால்தான்
அலைந்து கொண்டிருந்தேன்

அப்புறம்தான்
ஓடவேண்டியதாயிற்று
எதிர்ப்படும் நிறங்களிலிருந்து
உயிர்த்தெழும் வண்ணத்துப் பூச்சிகள்
துரத்தத் துரத்த

.- வே. ராமசாமிஉன் அம்மாவின் உபாயங்கள்

வருகிற
விடுமுறை தினத்தில்
ஊன்றவிருக்கும் புதிய செடிகள் பற்றி
கூறுகையில்
கருப்பட்டி தின்ன நாயாய்க்
குமைகிறாய்

கோரைப்புற்களை
எருமைகள் மேயும்
பிரதேசத்திலிருந்து வந்தவனிடம்
பால்சம் ஏஞ்சல் அரேலியோ என
இங்கிலீஸ் பூக்களாய்
பட்டியலிடுகிறாய்

நான்
மகிழிக் கீரையின்
கூம்பு வடிவிலான வெண்மலரை
எடுத்துரைக்க
பெருமிதம் நொறுங்கித் தவிக்கிறாய்

ரம்பங்களால் அறுபட்டு
டமாரெனச் சரியும்
மரங்களுக்காவும்
புற்களின் சிரசுகள்
முறிபடுவதற்காகவும்
ஆழ்ந்த துயரங்களை
சமர்ப்பிக்கிறாய்

மேலும்
மிக முக்கியமாக
அறியாமல் விட்டிருக்கிறாய்
என்னை
ஆள்வைத்து நையப்புடைத்தல்
காவல்துறையிடம் புகார் செய்தல்
வேலையைவிட்டு நீக்குதல்
முதலான
உன் அம்மாவின் உபாயங்களை

- வே. ராமசாமி

சேலை

இலவசச் சீலைன்னு
இளிச்சுட்டுப் போனாக்க
மட்டித் துணியொன்ன
மடியில் கட்டிட்டான்

ஒருநா உடுத்திட்டு
ஊற வெச்சாக்க
ஊதா போனதய்யா
UNMAI THRINCHATHAIYA

பஞ்சிட்டு நெஞ்சாகளா
முள்ளுட்டு தச்சாகளா
உசிர அரிக்குதய்யா
எரிச்சல் எடுக்குதய்யா

மாருச்சீலைன்னு
மக்கள் நெனச்சாக்க
வரிச்சீலை தானென்று
உருண்டு திரண்டதய்யா

ரேசங்கடைக்காரன்
புடுங்குன பத்துக்கும்
பெறுமானம் இல்லைய்யா
பெற்ற பொருளய்யா

மாத்துஉடை கேட்டு
மனசு தவிக்கையிலே
இனாஞ் சேலையிலும்
எஞ்சோகம் தீரலையே

சீலைப் பேனுங்கசீ
வனக் குடிக்கும்படி
சீலையில்லா தந்திருக்காக
சீமையில இல்லாத சீல

ஒருமுந்தி உடம்புல
மறுமுந்தி மரத்துல
உடுப்புக்கு ஒத்தச்சீல –
என்இடுப்புக்கு ஏதுமில்ல-

வே. ராமசாமி

மிருகக்காட்சி சாலையில்

தனிமையின்
வெகு உள்ளிறங்கித்
துயின்றிருந்தது முள்ளம்பன்றி

தனது
நீர் வற்றிய கிணற்றினுள்
ஏதோ செய்யும்
உழவனின் பாவனையில்
அதன் லயிப்பு

முட்கள்
பெருமரங்களாகச் செழித்த
ஒரு கனவில்
மாமலை போன்ற கிழங்கைச்
சுகித்துக் கொண்டிருக்கும்
அதற்கு
சாலை ஊழியன்
இக்
காங்கிரீட் கிடங்கில்
வைத்துவிட்டுப் போன
முட்டைக்கோசு
எம்மாத்திரம்

ஈயத்தட்டில் சமுத்திரத்தை
நிரப்பி வைத்தாலுமென்ன

வெட்ட வெளியில்
நாக்கைச் சுழற்றி
பூர்வீக கானகத்தின்
சுனையை அது
பருகிக் கொள்ளும்

வேறு கூண்டு நோக்கி
துரிதப்படுத்தும்
காவலாளி சொல்கிறான்
உனது கண்களில்
முள்ளம்பன்றியின்
முட்கள் தைத்ததோவென

திடுக்கிட்டு
நகரும் கால்களை
வரவேற்று நிற்கும்
புலியின் தனிமை
---------------ஆனைபோல்
உசரமிருந்தாலும்
வரப்பேற முடியாது
நெல்லறுக்கும்மெசினுக்கு

- வே. ராமசாமி

கோலிக்காய் கோட்பாடுகள்

அவரவர் வீட்டுப்பக்கம்
ஆட்டக்களம் அமையுங்கள்
சச்சரவுகளின்போது
அம்மாக்கள் வந்து
தீர்ப்பளிக்க ஏதுவாக

ஆடு மேய்க்க
அடம் பிடிக்க
மாடு பத்த
மறுக்க

இன்று
உவ்உவ் ஊதா
மஞ்சமஞ்ச மஞ்சை
நெத்தச்சிவப்பு
புத்தம்புதுக் கடசல்கள்
நேருக்குநேர் மோதல்

மழையைச் சபிக்க

டங்கான் கடன்
வெறும்பையோடு
வீடுதிரும்பல்

நீங்கள் ஆடும்போது
கசடுபவனை
நன்கு கவனிக்க

பித்தி போடாதே
ஏத்துங்கட்டு
கொழுவி விடாதே
உச்சிப்பிடி

கடைசிக்காய்
என்றாலும்
கை நடுங்காதே

மெத்தினால்
போட்டு வைக்க
காக்கிடவுசர் அணிக

உப்புக்குச் சப்பாணியை
துரத்தியடிக்க
கோலிமாயமாகும்
அபாயங்குறிTTHU

நூறுகோலி
வைத்திருப்பவன்
இல்லந்திறந்திருக்கும்
நேரம் அறிக
அவன் வீட்டுப் பரணயில்
புதையல் எடுக்க

உங்கள்
உலைமூடி நிறைந்த
கோலிச்செல்வங்களை
கிணற்றில் வீசிய
அப்பன்களின்
நெற்றிப் பொட்டைப் பெயர்க்க

இயலாதோர்
அண்டர் வேரையாவது
ஒளித்து வைக்க

வீட்டில் எதிர்ப்புள்ளோர்
வேலிமரத்தடியில் புதைக்க
கோழி கிளறிஎல்லாம்
பொதுவுடமை

ஒருகோலி = பத்து இலந்தைப்பழம்
பத்துக்கோலி = ஒரு உழக்கு புளியமுத்து
கோலி = திருச்செந்தூர்க் கடல்

- வே. ராமசாமி

கோழி V/S பருந்து

கோழிக்கு
பூஞ்சிறகு

ஆகவே இனி
பூவிதழில்
காது குடையாதீர்

பூவின்
இதழ் விரித்து
பறக்கவும் முடியாது

பருந்து
ராட்சசன்

அரக்கன்
இரும்பில்சிறகானாலும்
பறப்பான்

கோழிக்குஞ்சுகள்
பூக்குட்டிகள்

பூங்குட்டிகளை
கொத்தி வாழும்
கள்ளிப் பறந்து

கோழி
காளி

குஞ்சு தூக்க
இறங்கிய கழுகை
கொத்தி வீழ்த்தினாள்
எங்களூர் காளியாத்தா

ஆகவே இனி
நெருப்பிதழில்
காது குடையாதீர்
-----------------
இது
அடுக்காது

இவ்வளவு பெரிய
அயோக்கியனாக
இருந்துகொண்டு
பச்சைத்
தென்னங்கிளையின்
அண்மையில்
நின்றல்லவா
போட்டோ பிடிக்கிறாய்

- வே. ராமசாமி

No comments: