Monday, July 4, 2016

"ஜப்பானின் பன்றி"[தி இந்து"2015 சித்திரை மலரில் வெளியான சிறுகதை ]


ஜப்பானின் பன்றி  (சிறுகதை) 


"பல்லு இல்லாத குரங்கு அத்திப் பழத்துக்கு ஆசைப்பட்டதாம் "மருமகாக்காரி  சாப்பாட்டுத் தட்டை கொண்டாந்து வச்சிட்டுச் சொன்ன வார்த்தைகள் ஜப்பானுக்கு ஒன்னும் வேதனையைத்  தரவில்லை.அவங் கவனம் எல்லாம் தட்டில் கிடந்த பன்னிக்கறித் துண்டுகள் மேலேயே இருந்துச்சு.பன்னிக்கறின்னா அவனுக்கு அம்புட்டு ஆசை.அவசரமாய் ஒரு கறித்துண்டை எடுத்து வாயில் போட்டு அதக்கினான்.ரப்பரை வாயில் வைத்துச் சவட்டுவது போல சவக் சவக்குனு கறி நைய்யவில்லை.எச்சி மட்டும் ஊறியது.

இந்த அறுபது வயதில் ஜப்பானின் ஒரே கவலை பன்னிக்கறி திங்க முடியாததுதான்.மூக்கில் எங்கனயிருந்தோ பன்னிக்கறி வாசம் அடிச்சுக்கிட்டே இருக்கும் .தெருவில் யாரும் கறி வைக்காமல் இருந்தாலும் அந்த வாசம் வரும் .பன்னித் தொழு முன்னால் உக்காந்து வானம் பார்த்தால் மேகத்தில் பன்றிகள் நீச்சடிச்சிட்டுப் போகும் .பன்னிக் குட்டிகள் றெக்கை முளைச்சுப் பறக்கும் .உறக்கத்தில் பன்றிகள் கனவில் வந்து விளையாடும் .வாய் தன்னை அறியாமல் பன்னிக்கறி மெல்லும்.  மேச்சாதிக்காரங்க கொடுமைக்குப் பயந்து ஜப்பானின் மகன் கேரளாவில்  போய் எதோ தோட்டத்தில் வேலை செய்கிறான்.ஒருநல்ல நாள் பொல்ல நாளுக்கு ஊருக்கு வந்துட்டு உடனே போயிருவான் அப்பாவின் பன்றிக்கறி ஆசை அவனுக்கும் தெரியும் ."கறி திங்க முடியலனாலும் பரவாயில்ல பன்னிக்கறி குழம்பு வச்ச சாறையாவது குடின்னு "சொல்வான் .ஜப்பான் மூக்கு முட்ட சாறு குடிச்சு  அதுல ஒரு ஆறுதல் பட்டுக்குவான்
ஜப்பானுக்கு ஒரு பல் கூடத் தாடையில் இல்லை .இந்த வயசில் பல் இல்லாதது அதிசயங் கிடையாதுதான்.ஆனால் அந்தப் பற்களை ஜப்பான் இழந்தது முப்பது வயசுல . அப்போ அவம் பேரே "பன்னிக்கறி "தான் பட்டைச் சாராயம் குடிப்பது பன்னிக்கறி தின்பது இதே சோலிதான் .உலகத்தில் உள்ள மத்த விசயங்கள் அவனுக்கு முக்கியமில்லை.அவம் பொஞ்சாதி 'பூச்சி'பன்னிக்கறி செய்றதுல மன்னி.ரெண்டு பேரும் சொந்தமாய் பன்னி மந்தை வச்சிருந்தாங்க.அதுகளை வளத்து அவுக சாதிசனம் இருக்கும் ஊர்கள்ல கொண்டு போய் வித்து பிழைப்பு நடத்துனாங்க.மேச்சாதிக்காரங்க யாரும் பன்னிக்கறி திங்க மாட்டாங்க.யாவரிக மொத்தமாய் வாங்கி கேரளாவுக்கு அனுப்புவாங்க .வாங்குற அன்னைக்கு ஊருக்குள் லாரி வந்துரும் .பன்னி வளப்பவங்க விரட்டி விரட்டிப் பிடிச்சாந்து ஏத்துவாங்க.

காடு கரைகள்ல திரியும் பன்றிகள் போட்ட சாணியை பூச்சியும் ஜப்பானும் பெறக்குவாங்க.அதுக்குன்னு ஒரு கரண்டி  உண்டு.அதையும் அவுகளே செஞ்சுக்கிடுவாங்க.தேங்காய்ச் சிரட்டையில ஒரு மூங்கில் கம்பைக்    கோர்த்து அகப்பை செய்வாங்க .தகரம் வச்சும் இந்த அகப்பை ரெடி பண்ணுவாங்க .அந்தக் கரண்டியால பன்னி விட்டைய  எடுத்து கூடையில போட்டு கொண்டு வந்து வீட்டு முற்றத்துல காய வச்சுருவாங்க .நல்ல விறகாய் காஞ்ச பிறகு சம்சாரிக வந்து உரத்துக்கு வாங்கிட்டுப் போவாங்க .ஆட்டு மாட்டுச் சாணிய விடப் பன்னிச் சாணிக்குச் சத்து அதிகம்."பன்னி பலதையும் திங்குல்லாப்பா?பிறவு சத்து அதிகமாத்தான இருக்கும்"அப்படிம்பாங்க



ஆனால் விவசாய வீட்டுப் பிள்ளைகள் பன்னியக் கண்டாலே விட மாட்டாங்க .கல்லைக் கொண்டி எறி எறினு எறிஞ்சு விரட்டுவாங்க.ஊருக்குக் கிழக்கிட்டு பயல்கள் 'வெளிக்கு'இருக்கப் போவாங்க.இவங்க குத்தவச்சிட்டு இருக்கும்போதே பன்னிக உறு உறுனு உறுமிக்கிட்டு வந்துரும்.கழட்டுன டவுசரைக் ஒரு கையில் சுருட்டிக்கிட்டு  இன்னொரு கையில் கல்லெறிஞ்சு  பன்னிய விரட்டுவாங்க.கரட்டானையும்[ஓணான் ]பண்ணியவும் பயல்கள் எறிவாங்க.கரட்டானைக் கொன்னே விடுவாங்க.பன்னியக் கொல்ல முடியாது .கல்லெறிக்கு எல்லாம்  சாகுற பிராணி அது கிடையாது.ரெண்டும் பீ திங்கும் அது ஒரு காரணம்.கரட்டானை எல்லாச் சாதிக் காரங்களும் கொல்வாங்க.பன்னிய வலிய சாதிக்காரங்க மட்டும் அடிச்சு விரட்டுவாங்க.எளிய சனம் வளக்கும் பிராணிதானே எவனும் கேட்க மாட்டங்கிற திமிரு .இவங்க ஆடு மாட்ட அடிச்சா விடுவாங்களா?சும்மா கருவக் காட்ல சுத்திகிட்டு எதையோ மோந்து பாத்து திரியும் பன்னிகளையும் விட்டு வைக்க மாட்டங்க எறி தாங்க முடியாமல் அதுக பன்னித் தொழுவில் போய் அடைஞ்சால் தான் தப்பிக்க முடியும் .

சின்னப் பயல்கள் 'வெளிக்கு' இருக்கும்போது பன்னி விளையாட்டுக் காட்டும். .ரெம்பச் சின்னப் பயல்கள் பன்னிக்குப் பயந்து கிழக்கே வர மாட்டாங்க.பெரிய ஆட்கள் கிட்ட பன்னி யோசிச்சுதான் போகும் .சில நேரம் பெரிய ஆட்களையும் வெளிய இருக்கும் போது
கவனிக்காம இருந்தா முட்டித் தள்ளிரும்.ஆனால் என்ன அதிசயம்னா  பொம்பளைய கிட்ட பன்னி போகாது.தள்ளி நின்னு பாத்துட்டே இருந்து அவங்க எந்திரிச்சு போன பிறகுதான் வந்து மலம் திங்கும்.இது எதுக்குன்னு மனுசப்பெய அறிவுக்கு எட்டாதது.பெண் பிள்ளைங்க யாரும் பன்னிய அடிக்காதது ஒரு காரணாமா இருக்கலாம் .பன்னிய ஒலக்கையால உச்சியில் அடிச்சுக் கொல்றது ஆண்கள்தான்.கதறக் கதறக் வாயையும் காலையும் கட்டிச் சந்தையில போய் விக்கிறதும் பெண்கள் இல்ல.பன்னித் தொழுவுல தவிடு புண்ணாக்கு வைக்கிறது அவங்கதானே?கரட்டான் -பன்னி ரெண்டையும் எந்தச் சாதியிலயும் பெண்கள் அடிக்காம இருக்கது அவங்களுக்குப் புண்ணியம்தான் 


ஜப்பானோட பன்றி ஒருநா கீழமந்தைச் சாக்கடையில புரண்டுக்கிட்டு கிடந்துச்சு.நல்ல சினைப் பன்னி.சகதிக்குள்ள உழப்பினாலும் வாலை ஆட்டிக்கிட்டே இருக்கு.எப்பமாச்சும் வாலை ஆட்டாம பன்னியப் பாக்க முடியாது.தொழுவுல உறங்கையிலும் வாலாட்டும்.அப்ப அப்ப உறுமல் குறட்டை  விடும்.

மட்ட மல்லானிக்குப் பிறழவும் குப்புறடிக்க விழவுமா சகதியில் சுகமாய் கிடக்கார் பன்னியார்.மல்லாக்க கிடக்கையில பார்த்தால் பால்க்காம்பு பன்னென்டு..அடிவவுத்துல இங்கிட்டு ஆறு அங்கிட்டு ஆறு.சில பன்னிக்கு அவ்வஞ்சு காம்புதான் இருக்கும்.அதியப் பட்சம் பதினேழு பதினெட்டுக் குட்டிகள் ஒரு ஈத்துக்கு பன்னி போடும் .பொத்தாம் பொதுவா பன்னென்டு குட்டிக காம்புக்கு ஒன்னுங்கிற கணக்குல ஈனும்.ஆட்டு மந்தையில கிடாய் திரியிற மாதிரி பன்னி மந்தையில ஆண் பன்றிகள் ஒன்னு ரெண்டுதான் திரியும்

திடீர்னு பார்த்தா சகதியில கிடந்த ஜப்பானோட பன்னிய பயல்கள் சுத்தி வளைச்சிட்டாங்க.ஒரு செட்டுப் பசங்க எருக்கலம் புதர்கிட்ட ஒளிஞ்சு  நின்னாங்க.ஒரு கூட்டம் துத்திச்செடி மறைவுல நின்னது.மறைவாப் போனாத்தான் எறியலாம்கூட்டத்தைப் பார்த்ததும் பன்னி ஓடிரும்.பன்னி இவங்க வந்ததைப் பார்த்தும் ஓடலை.அது மல்லாக்க கிடக்கு.காம்புக ஈனப் போற பசுமாட்டுக்கு  விடைச்சு நிக்கது கெனக்கா நிக்கி.பன்னி முக்கிக்கிட்டே புரண்டது.சாக்கடைத் தண்ணியில குமிழ் குமிழா அடிக்கு.தவக்களை கிவக்களை தாவுதோனு பயல்கள் நினைச்சாங்க.டக்குனு சள சளனு தண்ணியில் ஒரு புத்தம்புது குட்டிப்பன்னி உழப்பி வருது.

"யாத்தே சகதிக்குள்ளியே குட்டி போட்டுருச்சுல.அதான் ஓடாமக் கிடந்திருக்கு"ஒரு பயல் சொல்ல மத்த பயல்கள் முழிக்காங்க.குட்டி போட்ட பன்னிய எறியவா வேண்டாமானு திகைச்சு போனாங்க.கொஞ்ச நேரத்துல இன்னொரு குட்டி ..பிறவு இன்னொன்னு ..இப்படியே பன்னிகுட்டியாச் சகதி அலம்பல் ஆனது.பன்னியா மீனா?னு சந்தேகம் வாற மாதிரி நீந்துதுக .பிறந்த குட்டிகள் பால்காம்பை சப்புதுக.ஒரு பக்கம் புதுக்குட்டிக பிறந்துகிட்டு இருக்கு.எல்லாம் பிறந்து அடி வயித்தில் மொய் மொய்னு அப்புதுக.பதினாலு குட்டிக மொத்தம்.காம்பு கிடைக்காத குட்டிகள் எதோ பறவைச் சத்தம் போடுதுக.   
பன்னியோட கெட்டநேரத்துக்கு அந்த நேரம் பார்த்து நாய்களும் குட்டியத் தூக்க வந்துருச்சுக.ஆறு நாய்கள் சகதி மேட்டில் நின்னு குலைக்குதுக.நாய்களைப் பார்த்ததும் பயகளுக்கு கொண்டாட்டம்.பன்னி ஆபத்தைப் புரிஞ்சுக்கிட்டது.வீல் வீல்னு கத்துது.ஸ்டாட் ஆகி ஸ்டாட் ஆகி டிராக்டர் வண்டி ஆப் ஆகும்லா?அதைப் போல அந்தச் சத்தம் கேட்டது.அப்படியே சுத்திச் சுத்தி தாய்ப்பன்றி ரவுண்டடிக்கு.

எவனோ ஒருபயல் ஒரு பந்து அளவுக்கு உள்ள கருங்கல்லுட்டு பன்னியின் அடி வயித்தில் சப்புன்னு எறியவும், ஒரு குட்டி நாய்களின் காலடியில் போய் விழுந்தது.ஒரு நாய் "எனக்கு இது போதும் நீங்க என்னமும் செய்ங்கனு"சொல்ற மாதிரி  பன்னிக்குட்டியத் தூக்கிட்டு ஓடிருச்சு.பன்னி சகதிய கலக்கி ஒழக்கி வெளியே வந்து வேற நாய்களை தண்ணிக்குள் இறங்க விடாமல்  அலகை வீச் வீச்னு வீசியது.பன்னி மன்னையால் அறை வாங்கினால் மனுசனே அவுட் ஆயிருவான்.வசமாய் அறை வாங்கியதில் நாய் ஒன்னு வாய் உடைஞ்சு சுருண்டது.நாய் செத்ததும் பயல்கள் பன்றி மேல் கல்லை மழையாய் பொழிந்தார்கள்.குட்டி ஈண்டதால பன்னி தவிச்சுப் போச்சு.கல்லும் தாறுமாறாய் வந்து விழுது.பால் மடுவில் பயல்கள் தொடர்ந்து கல்லாய் வீசினார்கள்.பன்னி தள்ளாடியது.நாய்கள் சேற்றில் இறங்கி ஆளுக்கு ஒரு குட்டியைக் கவ்விக் கொண்டு ஓடின.

தாய்ப்பன்றியின் உறுமல் பெரிதானது.ஜப்பான் தொழுவில் வேற பன்னிகளுக்கு.தவிடு கலந்து தண்ணி காட்டிக்கிட்டு இருந்தவன் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தான்.கீழமந்தைச் சாக்கடைக்கு வந்தவன்.குட்டி போட்ட பன்னியை அடிக்கீங்களே சாமிகளே உங்களுக்கே நல்லாருக்கா?வேணும்னா முறுவக் குட்டிய [இளம் பன்றி] எறிஞ்சு உங்க ஆத்திரத்தை தீத்துக்கக் கூடாதா அய்யானு"கையெடுத்துக் கும்பிட்டான்.பயல்கள் ஜப்பானையும் மரியாதை இல்லாமல் திட்டினார்கள்.

சகதிக்குள் பன்றிக் குட்டிகள் செத்துக் கிடந்ததைப் கவனித்த ஜப்பானுக்கு ஆத்திரம் வந்தது .கம்மாய்க்குள் நாய்கள் குட்டியைப் புரட்டி புரட்டி தின்று கொண்டிருந்ததைப் பார்த்தவன்,எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டான்.அடப் பாவிகளா "என் பன்னி எல்லாம் போச்சே
நீங்க விளங்காமக் குசுவாய் போயிருவீங்க"உங்களுக்கு நல்ல சாவு வராதுன்னு விசனத்தில் திட்டி பயல்களைப் பார்த்து மண்ணள்ளித் தூற்றினான்.பசங்க ஊருக்குள்ள ஓட்டம் பிடிச்சாங்க

பன்றி அப்படியே சகதி மேட்டில் வலி தாங்க முடியாமல் படுத்துவிட்டது.ஜப்பான் கண்ணீரோடு செத்துக் கிடந்த குட்டிகளை கூடையில் எடுத்துப் போட்டான்.உயிர் இருந்த பன்னிக்குட்டிகளையும் அதோட சேர்த்துப் போட்டான்.மறுபடிக்கும் நாய்கள் குட்டி தூக்க வந்துச்சுக.ஜப்பானுக்கு வெறி வந்து விட்டது.கல்லெடுத்து நாய்களை வசமாய் எறிந்தான்.ஒரு ஒரு கல்லுக்கும் நாய்கள் தெறித்து விழுந்து ஓடின.

பன்றியைச் செல்லங் கொஞ்சி எழுப்பினான்.அதால் எந்திரிக்க முடியலை.சரின்னுட்டு அவனே பன்றியைத் தோளில் தூக்கினான்.தோளில் பன்றி.இடுப்பில் கூடையில் குட்டிகளோடு நிமிர்ந்தவன் பயந்தே போனான்.மேச்சாதிக் காரங்க கம்பு செருப்போடு சுத்தி நிக்காங்க.சின்னப் பயல்கள் கொஞ்சம் எட்டி நின்னாங்க."சிறுக்கிவிள்ள எங்க பயல்களையே அடிச்சிருக்க?ஆத்தா அம்மான்னு வஞ்சுருக்கே.ஒனக்கு அம்புட்டுத் திமிரான்னு.அடி நொறுக்கு நொறுக்குன்னு நொறுக்குதாங்க."சாமீ ஏம் பன்னி...ன்னு ஜப்பான் வாயெடுக்கும் முன்னாடி கடை வாயில் ஊணிக்கம்பு அடி விழுந்து பற்கள் உதிர்ந்தன.ரத்தம் வந்த வாயில் செருப்படியும் கம்படியும்  மறுபடி மறுபடி விழுந்தது.ஜப்பான் தாடையே உடைஞ்சது.பல் தப்பிக்குமா?.கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எப்படி ஜப்பானின் பன்றி அடி பட்டதோ அதிலும் கடுமையாக ஜப்பான் வெளுக்கப்பட்டான் .

பூச்சி யாத்தேன்னு ஓடியாந்தாள்.ஜப்பான்-பன்றி-செத்த -சாகாத குட்டிகள் எல்லாரும் சகதிக்குள் கிடந்தார்கள்."இப்படி ஒரு வங்கொடுமை உண்டுமா?உங்க வம்சமே எடுபட்டுப் போகும்.ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான்லா?அவம் உங்களைப் பாத்துக்கிடுவான்னு" மேச்சாதி தெருவைப் பார்த்து ஏசினாள்.ஜப்பானை கைத்தாங்கலாய் குடிசைய நோக்கி கூட்டிப் போனாள்.இடுப்பில் கூடையை இடுக்கிக்கிட்டாள்.பன்றி நடக்க முடியாமல் நடந்து அழுது உறுமிக்கிட்டே பின்னால் போனது.

அன்னையிலிருந்து இன்னைக்கு வரை ஜப்பானால் அவனுக்குப் பிடித்த பன்னிக்கறி மட்டுமில்ல.எதையும் மென்னு திங்க முடியலை.பூச்சி இருந்த வரைக்கும் "விடு மச்சான் பன்னிக்கறி இல்ல-பல்லும் இல்ல-பல்லுத் தேய்க்கவும் தேவையில்லனு ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பாள் .அவள் போனபிறகு ஒரு மாவுப் பண்டங் கூட மெல்ல முடியாதவனை"வட்டாரத்தைத்  தூர்த்து வயிறு வளத்தானாம்.கொட்டாரத்தைத்  தூர்த்து குடலை வளத்தானாம்"னு சொலவம் சொல்கிறாள் மருமகாக்காரி
                                                                                    
                                                                                                வே.ராமசாமி

["தி இந்து"2015 சித்திரை மலரில் வெளியான சிறுகதை ]