Showing posts with label சூழலியல். Show all posts
Showing posts with label சூழலியல். Show all posts

Wednesday, February 25, 2015

தைலான் என்கிற தகைவிலான்:ஒரு தன்னனுபவம் [ காடு மூன்றாம் இதழில் எழுதியது ]

#
ஒரு கிராமத்துச் சிறுவனிடம் கேட்டால் மள மளவென்று பத்துச் செடிகளின் பெயரைச் சொல்வான்.சில பூக்களின் பெயரைச் சொல்வான்.சில பறவைகளின் பெயரைச் சொல்வான்.சூழல்,பசுமை பற்றிய பிரங்ஞை இல்லாமலே அவனுடைய வாழ்வின் புறச் சூழலிலிருந்து இயல்பாகவே இதை அவன் தெரிந்து கொள்கிறான்.அப்படி என்னுடைய சிறு பிராயத்தில் நான் அறிந்து கொண்ட பறவைகளில் ஒன்றுதான் தைலான்.
கணேஸ்-ரமேஸ் என்று பெயரில் ஸ் உள்ளவன் பெருமையாக நினைக்கப் படுகிற அப்போதிருந்த  கிராமத்தில் மற்ற பறவைகளின் பெயர்களைக் காட்டிலும் தைலான் என்கிற பெயர்ச்சொல் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.தவிரவும் எனது பாட்டிகளில் ஒருவருக்குத் தைலான் என்று பட்டப்பெயர் இருந்தது.காரணம் வயதான காலத்திலும் அவர் சுறுசுறுப்பாக இருப்பார்.தைலானும் காலையிலிருந்து மாலைவரை வரிசையாக தெரு முழுதும் பறந்த வண்ணம் இருக்கும்.
தைலான் சாரை சாரையாக ஊருக்குள் பறக்கிறது என்றால் நிலையான மழைக்காலம் அந்த இடத்தில் நிகழ்கிறது என்று பொருள்.ஐப்பசி-கார்த்திகை மாதங்களில் தைலான் குருவிகள் வரவில்லை எனில் மழை பெய்யாது அல்லது நிலை இல்லாத மழைக்காலம் என்று புரிந்து கொள்ளலாம்.எவ்வளவு மாபெரும் கோடை மழை பெய்தாலும் குளம் பெருகினாலும் தைலான் வராது.கார்கால மழையோடு வந்து கார்கால மழையோடு போய்விடும்            

நெல்நாற்று நடும் போது அதன் மேல் பறக்கும்.தை மாதத்தில் நெற்கதிர் விளைந்து நிற்கும்போதும் கதிர்களின் மேலே தைலான்களின் ஆய்ச்சலைப் பார்க்க முடியும்.நெல் நடவு காலத்திலிருந்து நெல் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும் காலம் வரை வயலின் மீது அதிக அளவில் அலைந்து கொண்டிருக்கும்.கதிர் கட்டிய காலத்தில் குறைந்த அளவே பறந்தாலும் உருவம் பெருத்தும் கரு ஊதா நிறம் மங்கியும் இருக்கும்.
நாலாப் பக்கத்திலும் வயல் இரண்டு கிலோமீட்டர் தூரம் என்றால் அந்தப் பச்சை வயல்களின் மேலே 'தைலான் ரயில்'போக வர,வளைந்து திரும்ப -மின் கம்பிகளை மொய்த்துக் கொண்டு நிற்க எனப் பார்த்தாலே சிலிர்க்கும் மெய்.
 அம்பு போல் பறந்து ஆளுக்கு அருகில் வந்ததும் சர்ரென்று விலகி, வீடுகளுக்குள் ஒரு ரவுண்ட் அடித்துத் திரும்பி,ஆட்களின் மேல் குருட்டாம்போக்கில் மோதி ,தட்டான்களூடே சைடு எடுத்து,மாட்டுத் தொழுவுக்குள் -ஆட்டு மந்தைக்குள் புகுந்து,குளத்தின் மீது திரிந்து  கொயகொய என்று ஊரே தைலான் மயப்படும் .கரிச்சான் சிறகில் ஊதா மையை ஊற்றி விட்டது போன்ற தைலான்கள் எங்கிருந்து வருகின்றன?என அப்போது சிந்தித்தது இல்லை."முசல் முட்டையைப் பார்த்தேம்ல"என்று பொய் சொல்கிற பயல் கூட தைலான் முட்டை பார்த்தேன்னு சொல்வதில்லை.எப்படி வருகிறதென்று பயல்களுக்குத் தெரியாது.'வலசை'வந்து செல்கின்றதென இப்போது தெரிகிறது.

தைலான் வேட்டைத் தாகம் பயல்களிடம் கரை புரண்டு ஓடும்.வீட்டுக்குள் நுழைந்து அவைகள் திரும்பும் முன் கதவை அடைத்துப் பிடிக்கும் ராஜதந்திரத்தை நானும் செய்து பார்த்துள்ளேன்.கதவுக்கும் அதன் மேலே நிலைப்படி கல்லுக்கும் இடையே 'ரயில்'சென்றுவிடும்.அந்த வழி இல்லாவிட்டாலும் வேறு இடுக்குகளில் சென்றுவிடும்.வெயிலும் மழையும் நுழைகிற வீட்டினுள் எந்தப் பறவை வந்தாலும் எளிதில் வெளியே தப்பிவிடும்.
துத்திச்செடி,புளியங் குறண்டி ,பருத்தி மார் ,தக்காளி மார் போன்றவற்றால் பட்டாம் பூச்சிகளை அடித்துப் பிடிக்கும் வீர புருசர்கள் தைலானையும் தாக்கிப் பிடிக்க முயல்வதுண்டு.இம் முயற்சியில் ஒன்றிரண்டுதான் மாட்டும்.எருமை மாட்டு வால் முடிகளைப்  பிடுங்கி கண்ணி செய்து பிடிப்பதுதான் பேர் பெற்ற வழி.கண்ணிக்கு காளை -பசு மாட்டு வால் முடிகள் எருமை முடி அளவுக்கு உதவாது.

 எனது ஊரைப் பற்றிக்[நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளம் ]கவிதை எழுதும் போது 'தரைக்கு மேலே ஒரு சாண் உயரத்தில் பறந்து ஈசலை இரை எடுக்கும் தைலான்'என்று எழுதியுள்ளேன்.ஈசல்தான் தைலான்களுக்கு  கண்கண்ட உணவு அப்படியெனில் பிற பூச்சிகளையும் திங்கும் என்று யூகிக்கலாம்.'வலசை'விபரத்தை பறவையியலாளர்கள் சொல்லவேண்டும்.
ஊரில் கண்மாய் கருவை மரங்களுக்கு இடையே மாட்டு வண்டித் தடம் செல்லும்.அதில் மழைக்காலத்தில்  ஈசல் புற்றுத் தோன்றிவிடும்.ஈசல் புற்றுக்குப் பக்கத்தில் கண்ணியை மண்ணில் புதைத்துச் சுருக்கு வெளியில் தெரியும் படி வைத்து விடுவார்கள்.பாதையில் பத்தடிக்கு ஒரு பயல் கண்ணி வைத்திருப்பான் .. தைலான்கள் அலை அலையாக அங்கு வரிசை கட்டும்.எல்லாப் பயல்களும் தூக்குவாளி வைத்திருப்பார்கள்.மாலையில் தூக்குவாளி நிறைய தைலான்கள் பிடித்த பயல்களும் உண்டு .ஈசலை பறந்த வண்ணமே பிடித்துச் செல்லும் தைலான்கள் ,வரிசையாக மீண்டும் மீண்டும் 'ரயில்' விடும் 'தப்பிய ஈசல்களின்  இறகுகள் பாதை எங்கும் உதிர்ந்த புளியமர இலைகள் போல கிடக்கும்.இறகுகள் 'எறும்பு ரயிலுக்கே'...
'தைலான்' பெயர்ச்சொல் கவர்ச்சி பற்றி  உதாரணம் சொல்ல வேண்டும்.'2011 ல் வெளிவந்த வாகை சூட வா'படத்தில் 'தைலத் தைலத் தைலக்கிளி'என்ற சின்னஞ் சிறிய பாடலை எழுதினேன் ..முன்னதாகச் வரிகள் தேர்வாகும் முன் 'சோளச் சோளச் சோளக் கிளி'  என்றும் எழுதினேன் ..இயக்குநர் சற்குணமும் இசையமைப்பாளர் ஜிப்ரானும் சோளக்கிளியை விட  'தைலக் கிளி'என்கிற சொல் புதிதாக இருக்கிறது என்று சொன்னார்கள்.[மெட்டுக்காக கிளி என்று எழுதினேன் .மக்கள் வழக்கில் தைலான் குருவி என்று மட்டுமே வழங்கப்படுகிறது] இவ்வாறாக மனதுக்குள் பறந்த தைலானைப் பாட்டில் பறக்க விட்டேன்..இப்போது இந்தக்  கட்டுரையில் .....

.

வே.ராமசாமி

Saturday, August 16, 2014

'பறவையே எங்கு இருக்கிறாய்?"

'பறவையே எங்கு இருக்கிறாய்?"


நிழற்படம் எடுப்பதில் எனக்கு ஆர்வம் கிடையாது அதில் நிபுணர் ஆகும் எண்ணம் எப்போதும் ஏற்படாது .ஆனால் பறவைகளை எடுப்பதற்கு தற்செயலாக விருப்பம் ஏற்பட்டு விட்டது
சிறிய வயதில் ஊரில் உள்ள எல்லாப் பயல்களும் கவட்டை வில் செய்து பறவைகளை அடித்துச் சுட்டுத் தின்பார்கள் .நானும் பறவைகளைக் குறி வைத்திருக்கிறேன் .குருவிக் கறி மிகவும் சுவையாக இருக்கும்.மிளகாய்த் தூள் உப்புச் சேர்த்து தீயில் வாட்டித் தின்போம்.வாட்டும் முன் அண்டிப் பகுதியில் அறுத்து குடலை நீக்கி விடுவோம்.புறாக் கிடைக்கும் பட்சத்தில் வீட்டிலேயே குழம்பு வைத்துத் தருவார்கள் .மஞ்சக் காமாலை வந்தவர்கள் காக்கா கறி தின்பார்கள் .தைலான் ,கொக்கு எனப் பறவைகள் கறி வைத்து தின்ற வகையில் மட்டும் அப்போது முக்கியமானது.கொக்கில் இறைச்சியே இருக்காது.தீயில் இலேசாகக் காட்டினாலே கறி இளகி விடும்.கொக்கோடு சுரைக்காய் சேர்த்து குழம்பு வைக்கலாம் என்று அம்மா சொல்வார். இரண்டு மூன்று கொக்குகள் சேர்ந்தால் நாக்குப் பட தின்று பார்க்கலாம்.

பால்யத்தில் கறியின் பொருட்டும் கவட்டை வில் சாகசத்தின் பொருட்டுமே பறவைகள் அறிமுகம்.செவக்காட்டில் வேர்க்கடலை ஊன்றினால் அதைத் கொத்திக் கிளைக்கும் பறவைகளை அடித்து விரட்டினால் வீட்டில் பாராட்டும் துட்டும் கிடைக்கும் .செல்லம் குழைந்தும் கொள்ளலாம்.கேப்பை .சோளம் ,கம்மங் கதிர் பயிர்களுக்கு தகர டின் தட்டும் போது கிளிகள் மற்றும் படை குருவிகளின் தொல்லை தெரிய வரும். பறவைகள் என்றால் அப்போது அவ்வளவுதான்.

"நேசனல் புக் டிரஸ்ட்"வெளியிட்ட சிட்டுக் குருவியின் வீழ்ச்சி'புத்தகத்தை தமிழில் சூழலியல் இவ்வளவு கவனம் பெறாத காலத்தில்வாசித்திருக்கிறேன்.அப்போது ஏதும் மனதில் தோன்றவில்லை.விலை குறைவாக இருந்ததால் வாங்கிப் படித்த புத்தகம் அது .

ஒருமுறை கவிஞர் ச.முத்துவேல் அவர்களைச் சந்திக்க கல்பாக்கம் சென்றபோது அவர் பறவைகளைத் தேடித் தேடிப் பார்த்தார் . .பறவைகள் படமிட்ட புத்தகமும் வைத்திருந்தார் ..நான் வேண்டா வெறுப்பாக அவருடன் செல்வேன் .'மீன் கொத்தியப் போல நீ கொத்துற 'ஆடுகளம்'படப் பாடல் [சினேகன்] பிரபலமாய் இருந்த நேரம் அது அந்த வரிகளைச் சிலாகித்து என்னைத் சுவராசியப் படுத்தி..மீன்கொத்தி பார்க்கலாம் என்று அழைத்துச் சென்றார் .சொன்னபடியே ஒரு குட்டையில் வெள்ளை மீன்கொத்தி, மீன் கொத்திப் பிடிக்கும் அழகை ரசித்தோம்.வரும் வழியில் பனங்காடையை நான் அவருக்கு அடையாளம் காட்டினேன் .பறவைகளை கவனிக்க வேண்டுமென முடிவெடுத்து பின்னர் மறந்து விட்டேன் .

பின்னாட்களில் அருண் நெடுஞ்செழியன் நண்பரானார்.அவரின் மூலம் காட்டுயிர் படக் கலைஞரும் சமீபத்தில் 'பனுவல்'வெளியிட்ட 'தமிழகத்தில் இரவாடிகள்' என்ற பறவையியல் நூலின் ஆசிரியருமான அ.சண்முகானந்தம் அவர்களின் அறிமுகம் கிட்டியது.
அவருடன் கோடியக்கரை செல்லும் வாய்ப்புக் கிட்டியது.அங்கு
கவிஞர்கள் வெய்யில் .நக்கீரன் இருவரும் வந்திருந்தனர் .நானும் வெய்யிலும் சண்முகானந்தம் காமிராவை வாங்கி ஓடி ஓடி 'வெளிமான்களை'படம் பிடிக்க முயன்று தோற்றோம்.அப் பயணத்திற்குப் பிறகு சில காடுகளுக்கு லெனின் லிங்கராஜா .அருண் ,பாலா சுப்பு ,ஆகியோரோடு சென்றாலும் அவர்கள் தீவிரமாகப் படம் பிடிக்க நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு உடனிருப்பேன்.பாலா பைனாக்குலர் வைத்திருப்பார் .

தற்பொழுது ஊரில் இருக்கும் இந்த காலத்தில் பறவைகளைப் பிடிக்க வேண்டுமென்று திட்டமிடவில்லை..எங்கள் பகுதியைச் சேர்ந்த லெனின் லிங்கராஜா.எனது ஊருக்கு வந்தார்.கோவில்பட்டி ரோட்டு மேல் எங்க ஊர் விலக்கில் உள்ள ஆலமரத்தினடியில் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் மரத்தில் நின்ற பெண்குயிலை அவர் படம் பிடித்தார்.அவர் சென்னை சென்ற மறுநாள் நான் அதே குயிலை ஆர்வத்தின் காரணமாய்ப் படம் பிடித்தேன் .அதை முகநூலில் பதிவிட்டேன்.அதைப் பார்த்த லெனின்,அதே இடத்தில் ஆண்குயில் கண்டிப்பாக வரும் .அதனையும் பிடிக்கச் சொன்னார் .கருங்குயிலையும் பிடித்தேன் ."குயில் பாடலாம் தன் முகங் காட்டுமா? "என்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளுக்கு ஏற்ப குயில் ஆலமர இலைகளுக்கிடையே பதுங்கிய படத்தை பதிவிட்டாலும் முகநூல் நண்பர்களின் பாராட்டு உற்சாகத்தைக் கொடுத்தது.ஆலம் பழம் பழுத்தால் அங்கு "குக்குறுவான்"பறவை வரும் என்றார் லெனின் .அதைத் தேடினேன் .அது கிடைக்கவில்லை .கிடைத்த பிற பறவைகளை எடுக்க ஆரம்பித்தேன் .சிறு வயதில் பார்த்த பறவைகளை தேடத் தொடங்கினேன் .என் வீடு வயல் ஓரத்தில் இருந்ததால் சில பறவைகளை எளிதில் எடுக்க முடிந்தது .என் துணைவியார் வீடும் வயல் ஓரத்தில் அமைந்திருந்தது மேலும் வசதியாய்ப் போனது

எங்கே போனாலும் காமிராவைக் எடுத்துச் சென்றேன் .சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள மலையான்குளம் -செவல் குளம்,கள்ளிகுளம்,மருதப்புரம்,சண்முகநல்லூர் .கருத்தானூர்.கிருஷ்ணாபுரம் சிதம்பராபுரம்.ரெட்டியபட்டி வேப்பங்குளம் ''வெள்ளங்குளம்,வாகைக்குளம் .அழகனேரி,குருவிகுளம் ,பாட்டத்தூர் ,ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் படம் பிடித்தேன் .என் ஊரிலிருந்து எந்தப் பக்கம் போனாலும் பத்துக்கிலோ மீட்டர் தாண்டவில்லை..

பவளக்கால் உள்ளான் வந்தபோது காமிரா இல்லாமல் போனது மிக கவலையாக இருந்தது..புள்ளிவாத்து முதலில் காமிராவில் சிக்காமல் விமானம் போல பறந்த விதம் எப்போதும் மறக்காது கரண்டி வாயன் எங்கிருந்தோ முதல் முறையாக எங்கள் ஊருக்கு வந்தான்.வால்காக்கை உள்ளிட்ட சில பறவைகளை சிறு பிராயத்தில் பார்த்ததே இல்லை. கருப்புத் தலை மைனாவைக் முதன் முதலில் கண்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. , கோட்டான் என்னையும் லெனினையும் வெயிலில் வாட வைத்தது கவுதாரியும் குக்குறுவானும் இன்னும் தெளிவான படமாகக் கிடைக்கவில்லை .சத்திமுத்தப் புலவரின் நாரையைப் பிடிக்கையில் உணர்ச்சி வசப்பட்டேன்.அண்ணன் அவைநாயகன் முகநூல் பதிவுகளுக்கு கருத்திட்டது மகிழ்ச்சியாய் இருந்தது .எனது அம்மா பெரும்பாலான பறவைகளுக்கு வட்டாரப் பெயர் என்னிடம் சொன்னாலும் நான் குழப்பம் ஏற்படும் என்று அதைப் பதியவில்லை.தமிழ்ப் பெயரை மட்டும் தெரிந்த பறவைகளுக்கு குறிப்பிட்டேன் .பயோனியல் பெயரை லெனினும் அவை நாயகன் அவர்களும் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தனர் .பாம்பே நேச்சுரல் முகனூலில் பதிவிட்டதும் உதவியது .அதில் பலர் இந்தியா முழுவதும் இருந்து பதிந்த வண்ணப் பறவைகள் போல எனது நிலத்தில் இல்லை .மண்ணுக்கேற்ற வகையில் குருவிகளுக்கும் வண்ண நிறம் கிடைக்கவில்லை என்று எண்ணிக் கொண்டேன் ..பதிவிட்ட வேளையில் பாராட்டிய நண்பர்களுக்கு மிகவும் நன்றி .என்னைப் புதிப்பிக்க பறவைகள் பயன்பட்டது .இன்னும் நிறைய பறவைகளுடனான அனுபவங்கள் முட்டி மோதினாலும் விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன் .

சென்னை திரும்ப இருக்கிறேன் இப்போது ஊரில் இருந்தது போல் இனி வரும் நாட்களில் நீண்டநாள் இருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று தோன்றவில்லை ..பறவை தேடிய பயணத்தை தற்காலிகமாக
முடித்துக் கொள்கிறேன் ..இனி பாடலைத் தேடி அல்லது வாழ்வைத் தேடிய பயணத்தைத் தொடர்கிறேன்...
                                                                                                                           
                                                                                                                                   வே.ராமசாமி
.                                                                                                               "சூரிய கதிர் 'மாதஇதழ்                                                                                                                                           ஆகஸ்ட்"2014