Showing posts with label நூல் விமர்சனம். Show all posts
Showing posts with label நூல் விமர்சனம். Show all posts

Saturday, August 16, 2014

கார்த்திக் நேத்தாவின் "தவளைக்கல் சிறுமி '

சாத்தானின் கடவுள் பாகம் 
[கார்த்திக் நேத்தாவின் "தவளைக்கல் சிறுமி 'தொகுப்பை  முன்வைத்து]  
வே.ராமசாமி 


அச்சுக்குப் போவதற்கு முன்பே கார்த்திக் நேத்தாவின் "தவளைக்கல்  சிறுமி "நூலை வாசித்துப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.அப்போது அதற்கு "தொல்காப்பியனின் பூனை "என்று அவர் பெயரிட்டிருந்ததாக நினைவு.தொகுப்பை படித்து விட்டு 'குழந்தையும் மனிதனும்'என்கிற ஒரே ஒரு கவிதையை மட்டும் விலக்கும்படிக்  கேட்டுக் கொண்டேன்.'நான் தற்கொலை செய்து கொள்ள வேறென்ன பெரிய காரணம் வேண்டும்'என்று அக்கவிதை முடியும்.அவர் கடைசி வரை அதை ஓப்புக் கொள்ளவில்லை..ஒரு நண்பனாக அவருடைய மன உலகை புரிய முயன்று எப்போதும் தோற்றே வந்திருக்கிறேன்.அதில் அவ்வப்போது வெற்றியும் கிடைத்து விடும் ."அம்மணமும் அற்றதே என் ஆடை"என்கிற அவரின் வரிகளே அதற்கு உதவி செய்யும்.. தற்கொலை செய்யக் காரணம் என்பது வாழ்வதற்கான முயற்சி என்று சொல்லி என்னை ஒரேயடியாகச் சாய்த்து விட்டார்.

கருப்பட்டித் துண்டுக்கு ஏங்கிய நாய்போல நல்ல கவிதை ஒன்றைப் படித்து விட மாட்டோமா என்று ஏங்கி அலைவதென் இயல்பு.கவிதை ரசிகர்கள் அனைவருக்கும் இதுதான் இயல்பாக இருக்கும் .உண்மையான கவிதை அனுபவத்திற்கு ஏங்கித் திரிபவர்கள் நீங்கள் என்றால் இந்தத் தொகுப்பை நீங்கள் படித்துத்தான் ஆக வேண்டும்.கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு வாசகனாக என் அயற்சியைப் போக்கியது இத்தொகுப்பு .

ஏனென்றால் எந்தக் கோரிக்கையும் இந்தக் கவிதைகள் வைக்கவில்லை .இச் சமூகத்திலிருந்து எதையும் பெற்றுக் கொள்ளத் துடிக்கவில்லை.மாறாக அள்ளி வழங்குகிறது."அந்தரத்தில் விதைத்த விதை ஆகாசமாய்ச் செழித்ததடி குட்டி என் செல்லம் "என்று புத்தரும் சித்தரும் கை கோர்த்துக் கொண்டு வருகிறார்கள்.'நான் பெற்று எடுப்பதற்குள் பிறந்தும் விடுகிறாள் பொம்மு'கொடிக் கயிற்றில் காயும் வெயிலை எடுத்துப் போக  இரவால் மட்டுமே முடியும்'என்று எளிய தரிசன வரிகளால் வாசகன் முகத்தில் கணம் தோறும் பச்சைத் தண்ணீரைத் தெளித்துக் கொண்டே இருக்கிறது.ஒருவரி குழந்தை போல் தவழ்ந்து நம்மை நோக்கி வருகிறது .மற்றொரு வரி ருத்ர பிண்டனாய் ஆவேசமாய் வருகிறது .

'காற்றின் தீராத பக்கங்களில் 'என்ற சொல்லிச் சொல்லி தேய்ந்து போன பிரமிளின் கவிதை..ராமச் சந்திரனா என்று கேட்டான்?என்ற நகுலனின் கவிதை ,பிறகு ஆத்மா நாமின் ஒன்றிரண்டு கவிதைகள்  ,'காதலைக் காதலென்றும் சொல்லலாம்' என்ற பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதை ..இப்படி ஒரு சில வரிகள் தானா நவீன கவிதையின் மைல் கற்கள்?இல்லை நிறைய வந்து விட்டது ..வானம் முழுக்க தெரியும்படி ஒரு ஜன்னல் கேட்கிற பிரான்சிஸ் கிருபா ..பிளாஸ்டிக் குவளையை மதுவை ஊற்றி பொன்னிறக் குவளை ஆக்குகிற இசை ..உள்ளங் கையில் 'அன்பின் குளத்தோடு' திரிகிற கடற்கரய்.. "நடனப் பெண்ணின் ஆடை அவிழ்ந்து கிடக்கிறது 'நிறைவேறாத காதலின் இரண்டு பெரிய கண்ணீர்த் துளிகள் என்று சொல்கிற குட்டி ரேவதி .பாறையில் கசியும் நீரை பாறையின் கண்ணீர் என்கிற தேன்மொழி ,பெண் நபி கேட்கிற ஹெச் .சி ரசூல் இப்படி நவீன கவிதையின் ஜீவ ஓட்டத்தில் பல வரிகள் இன்னும் சேர்க்கப் படாமலே இருக்கின்றன ..நண்பர்களைக் கேட்டால் இன்னும் சேர்க்க வேண்டிய நூறு வரிகளைச் சொல்வார்கள் .என்னைக் கேட்டால் ."பறவை இல்லாமல் பறக்கிறது இறகு " உயர உயரப் பறந்து உயர்திணை யானென எழுதி எழுதித் தெளிகிறது இறகு "கடற் சிறுமியின் அல்குல் 'புல் என்பது பனியின் வேர் 'நிறையப் பூச்சிகளைத் தின்றும் பறக்கத் தெரியாத சுடர் மனமா ?என்று நூறு வரிகளையும் கார்த்திக் நேத்தாவின் வரிகளாகவே சொல்லி விடுவேன்..

கார்த்திக் நேத்தா தன் முன்னோடியாகக் குறிப்பிடும் கவிஞர் பிரான்சிஸ் கிருபா .இருவரும் வானவில் நுனியை கவிதையில் அடிக்கடித் தொட்டுக் காட்டியவர்கள்.தள்ளு வண்டிக் கடையை 'தள்ளுவண்டி கோவில்காரன்"என்று எழுதி காவியம் படைப்பான் பிரான்சிஸ் ..இந்த வரிகளைப் அவருடைய" ஏழு வால்  நட்சத்திரம்' தொகுப்பில் படித்தபோது வியந்தேன் .இக்கவிதை படிக்காத மக்களுக்கும் விளங்கும் ..நவீன கவிதையை வாசிக்க உழைப்புத் தேவை என்ற  பம்மாத்தைப் போக்கியது.கிருபாவின் சில கவிதைகள் மவுன வாசிப்பை மக்கள் வாசிப்பாக மாற்றும் கூறுகளோடு இருப்பதை உணர்ந்து கார்த்திக் நேத்தாவிடம் இந்த அம்சத்தைத் தேடிப் பார்த்தேன் ..அமையவில்லை எல்லாக் கவிதையின் அடியிலும் மொழியின் சுரங்கப் பாதை நீண்டு கொண்டே போகிறது ..

தவளைக்கல் சிறுமியின் முக்கியக் கருதுகோள்கள் என்னவென்று பார்த்தால் இதில் உலவுகின்ற குழந்தைகள் ,பெண்கள்,  நாய், மீன், காற்று,வெளி எல்லாமே துறவு நிலையில் இருக்கின்றன.அஃறிணைகள் உயர்திணை  ஆகிவிடுகின்றன   இதை அவர் கவிதைகளில் காணப்படும் ஆன்மிகக் கூறு என்று சொல்வதை வாசகனாக என்னால் ஏற்க இயலவில்லை ..குழந்தைகள் பிறக்கும் போதே துறவிகளாகப் பிறந்து விடுகிறார்கள்.கார்த்திக் நேத்தாவின் கடவுளாகவும் அவர்களே இருக்கிறார்கள்.."குளத்திற்கு  கணநேரக்  கண்களைத் திறந்து விட்டுச் சிரிக்கிறாள் தவளைக்கல்  சிறுமி .என்று தொகுப்பின் தலைப்புக் கவிதையில் சொல்கிறவர் 'மழைக்கல்'என்கிற மற்றொரு கவிதையில் குளத்தின் கண்களாக மீன்கள் மெல்ல மெல்ல மேலே வந்து பார்க்கின்றன"என்று அசாத்திய தரிசனத்தை அளிக்கிறார்.மழைத் துளியை  உப்புச்சப்பற்ற பழமென்று கார்த்திக் உவமிப்பது வெறும் கற்பனை நோக்கிலானது மட்டுமல்ல .எல்லா வார்த்தைகளுக்கும் வாசகனின் அகத்திலிருந்து கவித்துவத்தை கிளறி எடுத்து வந்து கொட்டுகின்றன.வெறும் தரிசனமல்ல எல்லாமே அசாத்திய தரிசனங்கள் தான் ."ஒளி உருண்டை "இருள் முட்டை "கடவுளின் உதடுகளாய் கருப்பேறிய யோனி "மழையின் விந்துப் பிரவாகம் "சீப்பின் கூந்தல் "இப்படிக் கவிதையில் கிடக்கும் ஒற்றை வரிகளை எப்படி எளிதில் கடப்பது .வறட்சியில் கிடக்கும் வாசகன் நூறு வரிகளையும் கார்த்திக் நேத்தாவின் வரிகளாகவே சொல்லி விடுவான் என்று சொன்னதின்  காரணம் இதுவே .     
 
"ஒவ்வொரு நாளும் மாற்ற வேண்டிய உடையாக பிறப்புறுப்பும் இருக்க வேண்டும் 'அறுந்து தொங்கும்  கள்ளியில் ஒழுகும் பால் எனது காமம்.அப்போது போட்ட ஆட்டுப் புழுக்கைச் சூடு உனது காமம் "எனக் காமத்தைக் கொண்டாட்டமாக்கியவன், யோனியை  "என் கடிதம் தொலைந்த தபால் பெட்டி -அனாதிக்கனாதி-அயனும் மாலும் -பிறைமுடிச் சிவனும் பரிசாய் அனுப்பிய ஞானாட்சரம்-சாத்தானின் கடவுள் பாகம் -போதிமரம் அறியாத பேரிலை -தேவன் காட்டும் சூடம் "  என்றெழுதி தமிழ் நவீன கவிதையின் சாதனைக் கவிதையை நிகழ்த்துகிறான் .அது என்ன ?சாத்தானின் கடவுள் பாகம் ?எத்தனை அடுக்குகளை வரலாற்றை ..இந்த வரி திறந்து கொண்டு போகிறது . மண்டோதரியிடம் மணந்த ஒன்றை -நர்த்தன திலோத்தி மறுக்காத ஒன்றை -கவரி வீசிய கன்னியர் காட்டத் துடித்த ஒன்றை -சீதையிடம்  கேட்டுச் சீரழிந்ததே நின் பெருங் காமம்-ராவணா. இதிகாசத்தை -புராணத்தை -மரபை -வேறொரு வார்ப்பாக்கி கான்யாற்றங் கரையமர்ந்து -காற்றதிரா வண்ணம் யாழ் மீட்டும் 
அற்புதத்திற்கு ராவணா ஒரு சாட்சி ..பிரமிள் கார்த்திக்கின் ஆன்மாவுக்குள் இருப்பதற்கும் அந்தக் கவிதையே அத்தாட்சி ..

தமிழில் பெரும்பான்மையான கவிதைகள் நனவிடைத் தோய்தலாகவே இருப்பதை-அதில் ஒரு மட்டையடித் தன்மை இருப்பதை வாசகராக அனைவரும் எளிதில் உணர்ந்திருப்போம்.கார்த்திக் நேத்தாவின் கவிதைகள்தான் காட்டாற்று வெள்ளமாயிற்றே..அது எங்கேயும் தேங்கவில்லை.சொல்முறையில் கவிதைகள் நிகழ் தன்மையிலே இருக்கிறது .கவித்துவச் செறிவு ததும்பும் கவிதைகள் இப்படித்தாம் இருக்கும்.ஆனால் நினைவுகூரல்  கவிதை எழுதாமல்  எவரும் இருக்கவே முடியாது .தவளைக்கல் சிறுமியில் அவ்வண்ணம் 'மஞ்சள் மரணம்' என்ற  கவிதை உள்ளது.பிரபல வார இதழ் ஒன்றில் அது வெளியானது. அக் கவிதையோடு மரபை உள்ளீடாகக் கொண்டு எழுதிய சில கவிதைகளையும் அவர் அனுப்பியதும் வெகுஜன இதழான அவ்விதழ் மஞ்சள் மரணத்தையே வெளியிடும் என்ற எங்கள் இருவரின் முன்முடிவும்  சரியாக இருந்தது.

'இரவோடு இரவாகத் தூக்கு மாட்டிக்கொண்ட  பார்வதி  ஏன் என்னிடம் மட்டும் எலுமிச்சை தந்தாள்?எலுமிச்சை என்பது பழமில்லை எனக்கு .-மஞ்சள் மரணம்-மரணத்தின் புளிப்பு-சுழி  உதட்டுப் பார்வதியின் சுரோணிதம் "[சுரோணிதம் -தூமை ]என்று முடியும் கவிதையின் தொடக்க வரிகள் .."சைக்கிள் பயிலக் கற்றுத் தந்த தாத்தாவின் விரல் பிடித்து என் ஞாபகம் நடக்கும் இந்த வீதி அதே பழைய வீதியாக இருக்குமா ?எனத் தொடங்கும்.இக்கவிதையின் மற்ற வரிகளும் கதைத் தன்மையோடு இருக்கும்.சொல்முறையில் தொகுப்பிலிருந்து தனித்து நிற்கும் ஒரே கவிதை இது .ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் கவிதை முடியும் இடத்தில் கவிஞர் சாம்ராஜ் எழுதிய 'அவள் நைட்டி அணிந்ததில்லை 'என்ற கவிதை  தொடங்குகிறது   ..
'மரித்தலுக்குப்பின்  அம்மணமாய்க்  கிடக்கிறாள் மார்ச்சுவாரியில் ஈக்களும் கண்களும் 'அங்கேயே' மொய்க்க இப்படி ஆகுமெனில் அன்பு லட்சுமி தற்கொலையே செய்திருக்க மாட்டாள் " வாழ்நிலையும் அனுபவமும் வேறு வேறு என்றாலும்   இந்த இரண்டு கவிதைகளும்  ஒன்றுக்கொன்று கவித்துவப் பரி மாற்றத்தை நிகழ்த்திக் கொள்கின்றன.. பார்வதி -அன்பு லட்சுமி பெயர்களை மாற்றிவிட்டு இரண்டு கவிதைகளையும் ஓன்று சேர்த்துப் படிக்கலாம்..

மற்றுமொரு மாபெரும் வியப்பு என்னவென்றால் வாழ்வே மதுவாகிப் போனவன் கவிதையில் மது எங்கேயும் இடம் பெறவில்லை .ஒருவேளை மதுவை புத்தராக -இலையாக -மீனாக -காற்றாக -யோனியாக -மாற்றிப் பாடிவிட்டரா புரியவில்லை ..அதைப்போல மழை கார்த்திக் நேத்தாவின் கவிதைளில் பெரிய கவனம் பெறவில்லை . உண்மையில் மழை பெரிய கவனம் பெறாதது   அவரின் கவிதைகளுக்குச் சிறப்பான அம்சம்தான்.மலையாளக் கவிஞர் ஆ.அய்யப்பன் குறித்து அழகிய பெரியவன் எழுதிய சிறிய கட்டுரை ஒன்றைப் படித்தேன்.அவரைப் போன்ற கட்டுடைத்த வாழ்க்கையும் எழுத்தும்தான் கார்த்திக் நேத்தாவினுடயது..இன்னும் சொல்லப் போனால் பழைய பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ...

"தவளைக்கல் சிறுமி "தொகுப்பை 'க்ரியா'பதிப்பகம் தேடிப்பிடித்து வெளியிட்ட வரலாறு எனக்குத் தெரியும் .இத்தொகுப்பை வெளியிட்டதன் மூலம் க்ரியா நவீன தமிழ் கவிதைக்கு ஒரு பொக்கிசத்தை வழங்கியுள்ளது.தமிழின்  கவிதை விமர்சகர்கள் இதனை மேலும் மதிப்பிட வேண்டும். ..இது எப்போதாவது நிகழக் கூடிய அற்புதம் ..என் நண்பர் என்பதால் மிகக் குறைவாகவே இதை மதிப்பிட்டுள்ளேன்.நீங்கள் வேறொரு கவிதா அனுபத்தை இதில் பெறக் கூடும்  மீண்டும் சொல்கிறேன் ,நீங்கள் உண்மையான கவிதை அனுபவத்திற்கு ஏங்கித் திரிபவர்கள் என்றால் இந்தத் தொகுப்பை படியுங்கள் 

  
  

வெளியீடு 
க்ரியா -{044-24513993}
விலை 100
பக்கங்கள் 72
                                                                                       உங்கள் நூலகம் 'ஆகஸ்ட் 14

Sunday, October 9, 2011

எனது "ஏலேய்"கவிதைத் தொகுப்புக்கு அறிவுமதி அண்ணன் எழுதிய முன்னுரை


சீம்பால்

ஏலே... எடுபட்ட பசங்களா... எம் பேரம்பத்திக எழுதுறதெஎல்லாம் பழுதுன்னு சொல்லி பரிகாசம் பண்றீங்களாமே!

உங்க மூஞ்சிமேல சாணிய ஊத்தி... இத்துப் போனதுன்னு சொல்லி ஏறவானத்துல சொருகி வச்ச ஈக்கிமாத்த எடுத்து சாமியாடுனன்னா  தாங்கமாட்டீங்க.

வேகாத வெயில்ல காஞ்சி கருமாயம்பட்டு... ஆடிக்காத்துல ஆட்டுப்புழுக்கைங்க அல்லோலப்படுற மாதிரி... அல்லும்பகலும் உங்களுக்காகவே உழைச்சி ஒழச்சி ஓடாப்போன எங்க வாழ்க்கதா இத்துப்போன முல்லாட்டம் இந்தக் காடுகரம்புலேயே கழிஞ்சிபோனாலும் எம்பேரம் பேத்திகளாவது ரெண்டு எழுத்து கத்துக்கிட்டு... பட்டணப்பக்கம் போயி பச்சகண்டு மேயட்டும்னு பத்திவிட்டா... இங்க என்னா உங்களுக்கெல்லாம் எழுத்து மசுருன்னு ஏகத்தலாமா ஏகடியம்  செய்றீங்களாமே!

பாம்பு புடுங்குனாலும் பத்தியம் பாக்காம... தேளு கொட்டுனாலும் தேச்சிவுட்டுட்டு... பாடுபட்டு பாடுபட்டு உங்க பட்டாசாலையில கொண்டுவந்து கொட்டக் கொட்ட... அவுச்சி ஆவாட்டியாக்கிக் குந்தாணியில போட்டு குத்திகுத்திக் கொடுத்தா... பொடச்சிக் கொடுக்க சொல்லி படைக்கிறமாதிரி பாவன காட்டிப்புட்டு... பருப்பும் நெய்யுமா போட்டு நல்லா மூச்சுப்பிடிக்க முழுங்கிட்டு... அதக்கி அதக்கிக் குசுவ விட்டுக்கிட்டே நீங்க எழுதனதானடா இலக்கியங் கிழக்கியம்னுட்டு எகிறிக் குத்திக்கிறிங்க.

எங்ககிட்ட இல்லாத இலக்கியமாடா உங்ககிட்ட... மாருலருந்து பாலு சுரக்கற மாதிரி மனசிலேருந்து பாட்டு சுரக்கற பரம்பரடா எங்களது.

நடவுக்கும் அறுப்புக்கும் நாந்துக்குனியாத... நாத்து புடுங்கவும்... மொழி புடிக்கவும் வயல்ல எறங்காத உங்களோட எழுத்து மசுரெல்லாம்... எங்கக்குலவ பாட்டுக்கிட்டேயும் நடவுப்பாட்டுக்கிட்டேயும் எந்த வகையிலடா எதிர்ல நிக்கமுடியும்?

ஏதோ  விமர்சன  வெங்காயமாம்...

எங்க பேரம்பேத்திக கூழுக்காச்சி ஆறப்போட ஈயத்தட்டுல எதவா கொட்டுனா... இதெல்லாம் பீ பீன்னு சில 'செனப்பன்னிக' சிலுப்பிவுட்டுக்கிட்டு சிரிக்குதுகளாம்!

ஏலே... உங்க எழுத்த நீங்க எழுதிக்கிங்கடா... எங்க எழுத்த எங்கள எழுதவுடுங்கடா... இதெல்லாம் எழுத்து இல்லடா. எங்களோட பாட்டன்பாட்டிக... அப்பன் ஆத்தாளுக ஆண்டாண்டுகாலமா உழைப்போடையே உலர்ந்துடாம கொண்டுக்கிட்டுவந்து எங்ககிட்ட கொடுத்த ஈரம்டா...

எம் பேரன் வே. ராமசாமி இதுல எழுதியிருக்கிறதெல்லாம் வேர்க்கவிதைகள்டா. வேர்கள் இறக்கி... வீரனார்க்கோயில் காடு மாதிரி பச்சகட்டி பம்மி நிக்குற இந்த எழுத்துக்குள்ள நொழஞ்சி பாருங்க. வெளிய வர்ற வழி தெரியாம விழி பிதுங்கிப் போயிடுவீங்க.

உடல் சுக்கென
வற்றி வதங்கிய
பெருந்தெய்வமென்
அன்னை

பனைதாங்கும்
வெப்பம்
தான் தாங்குமவள்
சரீரம் பூத்த வியர்வையையும் விடாமல்
நக்கி உறிஞ்சும்
கொடுன்சூரியன்...

கைக்குக் கிடைப்பானெனில்
இவ்
அரிவாளால்
துண்டு துண்டாக
வெட்டித் தரிப்பேன்
ஒரு
சுள்ளி போலே...

இப்படி எழுத ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டும். வாழ்ந்திருக்கிறான் வே. ராமசாமி. வாய்க்குமோ...    'ஞானங்' களுக்கு இவையெல்லாம்!

இளைங்கர்களற்று
வெறிச்சோடிக் கிடக்கிறது
தெருமுனைத் திண்ணை

ஏன்... ஏன்...   வேளாண் விஞ்ஞானிகளென்று   உங்களிடம் எம் வயல்வெளி அறிவை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி நின்றதால்...


இன்று... எம் விதைகள் மலடு... எம் வயல்கள் மலடு... எம் ஆறுகள் மலடு. எம் மழை...  மலை அனைத்தும் அனைத்தும் மலடு.
அதனால்தான்

சொல்லுங்கள்
தேநீரகத்தில்
ஊரில் மழைபெய்த செய்தி படித்து
அழாமல் இருக்க முடியுமா...

என்று அழுகிறான் வே. ராமசாமி.

நம்பிவந்த நகரம்... வெம்பிப் போகச்செய்த வேதனையை...

பசிவாடை வீசும்
நகரத் தெருக்களில்
அலைந்த கால்களில்
பிசுபிசுக்கும் நிராகரிப்பு

என்று பதிவு செய்கிறான்.

ஒரு சிறுகுழந்தை
பிறிதோர் குழந்தைக்கு வழங்கும்
முகாந்திரமற்ற
முத்தச் சுவையுடன்
ஒருத்தரையும்
அன்பு செய்ய முடிவதில்லை...

என்றும் தன் ஈரம் வாங்க எவருமில்லையென்ற தவிப்பில்... இந்த நகரம் தந்த  மனச்சுமையை தமிழில் இறக்கி வைக்கிறான்.

வெப்பங்குடித்து
மேனி சுருங்கி
கிழவியாயின தாவர இலைகள்...

வே. ராமசாமிக்கென வாய்த்த... உத்தி பிடித்துக்கொண்டு விளையாடுகிற நடை.

கொழித்துச்
செழிக்கிறது வாரியம்
நலிந்து போனது
விளையாட்டு...

இதற்குள்ளாக பேசப்படுகிற அரசியல் பெரிது.

இன்று
பசிய சோள நாற்றில்
வாய் வைத்து
அலகில் அறைவாங்கிய
பசுவின் துயரோடு
பாதையில் போகிறேன்...

படித்தது உள்ளுக்குள் ஊறித் தளும்புகிறது கண்ணீர்.

தைப்புராக்களின் கேவலில் நிறையும் கிணறாக இத்தொகுப்பு நெடுக எம் மக்களின் வாழ்வே நிறைந்து வழிகிறது.

முன்னத்தங்கால்
கிளைபோட்டு
பின்னத்தங்கால்
தரையூன்றி
அவ்வெள்ளாடு குடிப்பது
இலைகளின்
முலைப்பால்...

ஓவியர் மருதுவிடம் கொடுத்து இந்த வரிகளை ஓவியமாக்கிப் பார்க்கவேண்டும்.

உழுது முடித்த
ஓய்வில்
தகப்பன்
தயாரித்துத் தந்த
பூவரசு
இலைச் சுருட்டில்
பீப்பீ எழுப்பும்
அம்மணச் சிறுவனின்
இசைக்குப்
பதிலறுக்கத்தான்
காலமெல்லாம்
கூவித்திரிகிறது குயில்...

இயற்கையோடு இயற்கையாய் வாழ்ந்த நம் இனத்தை இனங்கான இக்கவிதை போதும்.

ஆமணக்கு
முத்துபோலும்
பொடித்தவளை

பெருவிரல் நகமாய்
சின்னநண்டு

முட்டையோட்டின்
ஈரான்காயாத
கோழிக் குஞ்சு

கவிதை...

என் ஆசான் அப்துல் ரகுமான் படித்தால்... தனிமையில் படித்தாலும்.... அவரிடமிருந்து அடடே... சொல்லவைக்கும் அழகு!

கார்காலத்தில்
எல்லா வீட்டின்
கதவுகளும்
ஆகுதி நடத்தும்
வேர்பிடித்து
வளரும் பசுமரமாக...

இப்படி... இப்படி...   எழுதி... எழுதி...  தவளைகளை பெய்கிற மழை... கொக்குகள் காய்க்கிற மரங்கள் நினைந்த மலையான்குளத்து வாழ்வை சுண்டக்காய்ச்சி சுவையான சீம்பாலை உங்கள்முன் நீட்டி இருக்கிறான்.

சுவையுங்கள்.

கிளிக்கூட்டம் விரட்டவும்
மனசிராது....

என்கிற எம் பேரன் வே. ராமசாமியோட மனச... என்னோட பேச்ச கேட்ட கோபத்துல காயப்படுத்திடாதீங்க.

அன்புடன்
அறிவுமதி.

Saturday, April 17, 2010

‘வலி’ தருகின்ற வலி

‘வலி’ தருகின்ற வலி

வே. இராமசாமி

ஈழத் தமிழ் அகதிகளின் சோகங்களை முன்வைத்து வெளிவந்திருக்கிறது கவிஞர் அறிவுமதியின் ‘வலி’ கவிதைத் தொகுப்பு. இந்த நூலை நம் கையில் வாங்கும் போது ரத்தம் சொட்டுகின்ற ஒரு ஈரக்குலை துடிப்பது போலுள்ளது. மீனை / அரியும்போது / கிடைத்தது / குழந்தையின் / கண் என்கிற முதல் கவிதையே நம் நெஞ்சை உலுக்குகிறது. மீனை அரிந்து கொண்டிருக்கும் கையில் மீன்தானே கிடைக்க வேண்டும். கண் எங்கிருந்து வந்தது? அதுவும் குழந்தையின் கண் குழந்தையிலும் தமிழ்க் குழந்தையின் கண். இன வெறியர்களால் தோண்டி கடலில் வீசப்பட்டகண். எவ்வாறு இதனை தாங்கிக் கொள்வது? இந்தக் கவிதையின் அதிர்வுகள் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னே போய் புறநானூற்றுப் பாடல் காட்சியில் முட்டுகிறது.

‘தண்புனல் பரந்த மண்மறுத்துமீனின் செறுக்கும்’ - இந்த வரிகள் கருங்கழல் ஆதனார் என்ற புலவரால் பாடப்பட்டுள்ளது. சோழன் கரிகால் பெருவளத்தான் நாட்டுச் செழிப்பைச் சொல்வது. வாய்க்காலில் ஓடிவருகிற தண்ணீர் உடைந்து விடுகிறது. ஒரு கை மண்ணள்ளி அடைக்கிறது. அள்ளினால் மண் வரவில்லை மீன்கள் வருகின்றன. மீன்கள் உடைப்பை அடைக்கின்றன. இன்று கண் வருகிறது. ஈழத் தமிழர்களின் வாழ்வு அவலத்தின் விளிம்பில் நிற்கிறது. நாம் வெட்கமில்லாமல் வேடிக்கை பார்க்கிறோம்.

படகில் / ஏறினோம் / படகுகளை / விற்று / இங்கே / வீடு / கிடைப்பதற்குள் / அங்கே / நாடு / கிடைத்துவிடும் / இராமேசு வரத்தில் / எல்லோரும் / குளித்துக் / கரையேறுகிறார்கள் / நாங்கள் / குதித்துக் / கரையேறுகிறோம். இந்தக் கவிதை வரிக ளெல்லாம் தமிழ் நெஞ்சங்களில் கணுக்கணுவாய் தெறிக்கின்றன. தாய்த்தமிழகம் தங்கள் சகோதரர்களை வரவேற்கும் லட்சணம் தெரிகிறது. வாடகைக்கு வீடு கேட்டதற்கு வீடு தராவிட்டாலும் பரவாயில்லை காவல் துறையைக் கூட்டி வந்து காட்டிக் கொடுக்கிற நவீனத் தமிழர்களின் முகத்தில் அறைகிறது. இங்கு அகதியாக வந்தவர்கள் படுகின்ற அவதிகளை இந்த நூல் முழுவதும் வேதனை பொங்கப் பதிவு செய்கிறார் அறிவுமதி. மேலும் வெறும் ஊமைச் சாட்சியாக - கையறு நிலையாக இந்தக் கவிதைகள் முடியும் போது சொந்த நாட்டில் - சொந்த வீட்டில் நாமும் அகதிகளாக ஆக்கப்பட்டோமோ என்றும் தோன்றுகிறது.

தமிழ்ப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இலங்கையில் நடக்கின்ற கர்ண கொடூரங்களைப் பல கவிதைகள் பேசுகின்றன. உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடைய ஒரு மழலையின் புகைப்படத்திற்கு அருகே பச்சிளங்குழந்தையை / உடல் நெடுக / இப்படி உளியால் / கொத்தியிருக்கிறார்களே / புத்தர் சிலைக்கு / முயற்சி செய்திருப்பார்களா / என்று கேட்கும் அறிவுமதி, சாலைபோடும் / பெரு வண்டியைப் / பார்த்ததும் / பதறிப்போய் / பதுங்குகின்றன / விளையாடிக் / கொண்டிருந்த / குழந்தைகள் / என்று அகதிமுகாமில் தான் கண்ட நேரடி அனுபவத்தை எழுதும்போது என்ன நடந்திருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. குழந்தைக்கு ரோடுரோலரும் பீரங்கி போல்தான் தெரிகிறது. இந்த இடத்தில் செஞ்சோலைச் சோகத்தைப் பற்றி கவிஞர் பச்சியப்பன் எழுதிய ‘வேட்டையாடப் படுவோம் / என்று தெரியாமலே / விளையாடிக் கொண்டிருக்கிறது / எனது குழந்தையும் / என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.

பொதுவாக ஒரு படைப்பாளி தன்னனுபவத்தில் தனக்கு நேர்ந்த வலியை முன்வைத்து எழுதும்போது கூசாமல் ‘சுயபரிதாபம்’ என்று சொல்லக்கூடியவர்கள் ஒரு இனத்தின் வேதனையை முன்வைத்து எழுதும்போது அப்படிச் சொல்லித் தப்பி விடமுடியாது. மருந்து பற்றி / படித்துக் / கொண் டிருக்கையில் / விழுந்தது மரணம் / ஆழிப் பேரலைகளும் / எங்கள் பெண்களை / வீடு புகுந்து / இழுத்துப்போய் / கொல்லத்தான் செய்தன / ஆனாலும்.... / என்று கேட்கும் அறிவுமதியின் கேள்விக்கு பதில் யாரிடமிருக்கிறது? இந்த மாதிரியான கவிதைகளில் கவிச்சுவை தேடித் திரிவதே ஒரு அபத்தமான விஷயம். வாளில் அழகைப் பார்க்காதே கூர்மையைப் பார் என்ற காசி ஆனந்தனின் கவிதையைப் போலத்தான் அறிவுமதியின் இந்தக் கவிதைத் தொகுப்பும்.

முகாமிற்கு / அருகில் உள்ள / பள்ளியிலிருந்து / கேட்கிறது / யாதும் ஊரே / யாவரும் கேளிர் / என்றொரு கவிதைக் குரல் ஒலிக்கிறது இந்நூலில். உண்மையில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வரிகளை பன்னாட்டுக் கம்பெனிகள் தான் தமிழனை விடச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளன போலும். இந்தியாவில் - தமிழகத்தில் - எந்தக் கிராமத்தில் போய்ப் பார்த்தாலும் விவசாயின் சவ ஊர்வலம் ஒன்று முக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் சிறப்புப் பொருளாதார மண்டலம் விதைக் கொட்டையைத் தவிர வேறு எல்லாவிதைகளையும் பறித்துக் கொள்ளும் - மலட்டு விதைக் கம்பெனிகள் குறித்தும் தமிழ்தேசியர்கள் தங்கள் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டுமென்று அறிவுமதியின் இந்த நூலை முன்வைத்து நாம் கேட்டுக் கொள்ள முடியும்.

தோழர் இரா. நல்லக்கண்ணு, பிஜீ திவில் - கரும்புத் தோட்டத்தில் தமிழ்ப் பெண்கள் பட்ட துயரத்தைப் பாடிய பாரதியின் பாடலோடு அறிவுமதியின் இந்த கவித் தொகுப்பை ஒப்பிட்டு வழங்கியுள்ள நெகிழ்வுரையோடும் காசி ஆனந்தனின் விறார்ந்த வலியுரையோடும், ‘நாட்டுக்காக உயிரை விடுவது உத்தமம். ஆனால் அந்த உயிரை விடுவதற்கும் ஒரு நாடு வேண்டுமல்லவா? என்கிற இயக்குநர் சீமானின் உயிருரை யோடும் எங்கள் தாய்க் கவிஞனின் வலியை முன்மொழிகிற பழநிபாரதியின் பின்னுரையோடும் வந்துள்ள இந்த நூல் தமிழர்கள் அனைவரின் நெஞ்சிலும் நிகழ்கால வரலாற்று வலியைப் பிரதிபலிக்கும் முகமாக அமைந்துள்ளது. ஈழத்தமிழ் அகதிகள் முகாமை நோக்கி நம் கவனத்தைக் குவிக்கிறது.


வலி
ஆசிரியர் : அறிவுமதி, வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17,விலை : ரூ. 70.00

Monday, April 12, 2010

நூல் விமர்சனம்

தெக்கிக் கொல்லையும் காதறுந்த ஆடும் வே. இராமசாமி

இன்னும் வேறென்ன கேடு வேண்டும் என்று கேட்கிற அளவுக்கு விவசாயம் சீரழிந்து விட்டது. எப்படித் தாய்மொழி தெரியாத தலைமுறை ஒன்று தமிழ்நாட்டில் உருவாகி உள்ளதோ, அதைப்போலவே விவசாயத்தை மேற்கொள்ளாத ஒரு தலைமுறையும் இங்கு உருவாகிவிட்டது. இச்சூழ்நிலையில் மண் சார்ந்த - உழவு சார்ந்த வாழ்வியலின் அவலங்களை, பெருமிதங்களை, பதிவுகளைத் தொடர்ந்து எழுதிவரக்கூடிய கவிஞர்களுள் சிவராஜ் வெகு முக்கியமானவர். அவரது சமீபத்திய நெக்குருகச் செய்யும் கவிதைத் தொகுப்பு “நிலமிசை”.நிலமிசையில் விதைமுளைக்கும். ஆனால் இவரது கவிதைகளில் நிலமே விதையாக முளைத்துள்ளது. குழந்தையின் பனிப்படலங்கள் போன்ற கண்களினூடே உருவங்கள் சரியாகப் பதியாத போதே நிலம் நெஞ்சில் படிந்து விடுகிறது. ஏனெனில் விவசாயி வீட்டுப் பிள்ளைகளின் தொட்டில் வீட்டில் ஆடியதை விட காட்டிலாடியதே அதிகமாக இருக்கும். சிவராஜிக்கும் அவரது தெக்கிக் கொல்லை அப்படித்தான் போலும். வளர்ந்து தன்னந்தனியாக தனது கன்னி உழவை நிலத்தில் நிகழ்த்தும் போது கிராதி கிராதியாய் அது பெயர்ந்திருக்கிறது. அந்தத் துண்டுகளை - உழவுக் கட்டிகளை வார்த்தையில் வைத்து தெக்கிக் கொல்லை என்ற கவிதையில் நம்மை நெகிழ வைக்கிறார்.ஐப்பசி மழையில் / கொடி அழுகி / கடல மொளச்சுப் போனாலும் / கம்பு எங்களுக்கு / கஞ்சி ஊத்தியிருக்கு. இந்தக் கவிதை வரிகளில் பசுமைப் புரட்சிக்கு முந்தியிருந்த பயிர்த் தொழில்நுட்பமொன்று பதிவாகியுள்ளது. நிலத்தில் - வீட்டில் எப்போதும் உணவுப் பயிர் ஒன்று இருக்கும். ஒன்றில்லா விட்டால் ஒன்று வவுத்துப் பசி போக்கும். உணர்வு பூர்வமாகச் செய்தார்களோ இல்லையோ உணவுப் பயிர் எல்லாக் காலங்களிலும் மகசூலில் இருக்கும். இப்போது எல்லாம் முடிந்த காலத்தில் ஏழைகளுக்கு ரெண்டு ஏக்கர் தரப் போகிறார்களாம் நல்லது. ஏற்கனவே உள்ள பூமியில் விவசாயம் நன்முறையில் நடக்க வழியில்லையே என்ற கேள்விக்கு விடையில்லை. உழவன் சாகவேண்டுமெனில் பூச்சிமருந்து குடிக்கவேண்டாம்; பருத்தி பயிரிட்டால் போதும் என்ற நிலை இன்றுள்ளது. இம்மாதிரியான பிரச்சினைகளைப் பேசுதலே மண் சார்ந்த கவிதைகளின் அடுத்த கட்டமாக இருக்க முடியும். வெறும் பதிவுகளை வைத்து மாரடிப்பதை இனி விடவேண்டும்.‘வரவுத்திருவை’ பற்றிய விரிவான கவிதையொன்று இந்த ‘நிலமிசை’த் தொகுப்பை அணி செய்கிறது. உமிய தள்ளிவிட்டு / பீராஞ்சு பொடச்சு / கல அரிசி அளந்தாக்க / படி அரிசி கிடைக்கும் / பகல் பொழுது ஓடும் / சுழலும் திருவைப்போல் / இவ்வரிகளைப் படிக்கும் போதே வாசகன் தலையில் கரகரவெனத் திருவைச் சுற்றுகிற பிரேமை தட்டிவிடும். அந்த அளவுக்கு அச்சு அசலாக அமைந்துள்ளது. அணிந்துரையில் பழநிபாரதி திருவையைப் பற்றி இதுவரை யாரும் எழுதவில்லை என்று பாராட்டிச் சொல்லியுள்ளார்.அதைப்போலவே ‘விடிவிளக்கு’என்கிற கவிதை நம் கவனத்தைக் கவர்கிறது. இதில் கவிஞர் சிவராஜ் முந்திரிக் கொட்டை பொறுக்கும் பெண்ணின் பாடுகளை வருணித்துள்ளார். காலில்தைத்த / காரமுள்ளின் வலி / செருப்பாய் ஆகும் / குளவி கொட்டி / கண்ணு வீங்கியிருக்கும் / முந்திரிப்பால் / பட்டயிடமெல்லாம் / வெந்து போயிருக்கும் - இவ்வளவு துன்பங்களோடு வீட்டிற்கு வந்தவள் பிள்ளைக்கு வெட்டி வெட்டி இழுக்கும்.அவ்வேளையில் அவளின் நிலையை “இரவெல்லாம் / இவளும் எரிவாள் / விளக்கோடு” என்று கவித்துவம் ததும்ப படம் பிடிக்கிறார் நூலாசிரியர்.‘செவலையெனும் சித்தப்பா’என்ற இத்தொகுப்பிலுள்ள கவிதை முத்தாய்ப்பாக உள்ளது. ஆநிரைகளை விட்டுவிட்டு உழவனின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாது. அது நடந்ததுயெல்லாம் / நேர் கோடாக்கினால் / ஆசியாக் கண்டத்தையே / அளந்து வந்திருக்கும் / பொய்ய வயக்காட்டில் / இடுப்பு மட்டும் சேற்றிலே / தவழ்ந்து கொண்டு வரும் பொழுது / செவலையைப் பார்க்க / பாவமாக இருக்கும் / அன்னிக்கு அதுக்கு / புண்ணாக்கு கிடைக்கும் / அப்பா போனதுக்கப்புறம் / செவலைதான் / எங்களுக்குச் சோறு போட்டுச்சு / எங்களை விட்டுப் பிரிந்த / செவலை செத்துப் போனாலும் / எந்தத் தப்பிலாவது / தவிலிலாவது / அழுது கொண்டுதான் இருக்கும் / எங்களைப் போல... இந்தக் கவிதை முடியும் இடத்தில் நமக்குக் கண்ணீர்த்துளி தொடங்கிவிடும். நல்ல கவிதைகள் அழவைக்கும். ஒரு நாள் எழவைக்கும். அந்தச் சக்தி சிவராஜின் கவிதைக்கு இருக்கிறது.மொத்தத்தில் இக்கவிதைத் தொகுப்பு உண்மையைப் பேசுகிறது. கவிதைக்கும் கவிஞனின் வாழ்க்கைக்கும் தொடர்புள்ளது. காதல் என்றும் புரட்சி என்றும் அம்மையின் மேன்மை என்றும் இது கொட்டி முழக்கவில்லை. தன்னைத் தானே மேம்படுத்தி - சிறப்புரைத்து - இது பொய்யுரைக்கவில்லை. எழுதியபடியே வாழ்கிறான் ‘நிலமிசை’யில் இக்கவிஞன். தமிழ்நாட்டில் எழுதியபடியே கவிஞன் வாழ்கிறானென்றால் அது அரிதல்லவா? முன்னுரையில் அவரே சொல்வதுபோல் படித்தது மறந்துவிடும். பட்டபாடு மறக்க முடியாது.நிலமிசைஆசிரியர் : சிவராஜ்,வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்,142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை,சென்னை - 14, விலை : ரூ. 45.00.

Sunday, March 28, 2010

'கடலோடி நரசய்யா 'அவர்களின் மதிப்புரை

ஏலேய்






பிடித்தவை


ஆசிரியர்: வே.இராம சாமி
வெளியீடு: மதி நிலையம்
பகுதி: கவிதைகள்
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 74 Views
விலை: ரூ.40

மதி நிலையம், 4 (39), தணிகாசலம் ரோடு, தி.நகர், சென்னை17. (பக்கம்: 96. விலை: ரூ.40).

இளைஞர்கள் தமிழுக்குச் சேவை செய்ய, கவிதை நயத்தை வாழையடி வாழையாக வளர்த்திட, வந்து கொண்டிருக்கின்றனர் என்பதற்கு அத்தாட்சி இந்த நூல். வயதில் வளர்ந்து விட்டவர்களிடமிருந்து, கவிதை இளைஞர்கள் கைகளுக்கு இன்னும் மெருகேறி வந்திருப்பதற்கும் ஒரு உதாரணம்!

"ஏலேய்' என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பில் பல சிறந்த கவிதைகள் உள்ளன. எரிமலை போல பிழம்பை பீய்ச்சிக் கொண்டு வந்தாலும், தன் கவித்துவத்தால் கட்டுப்படுத்திய எண்ணங்களை, அவற்றின் வேகம் குறையாது, இகழ்ச்சியும் வெறுப்பும் இன்றி கொடுத்திருப்பது இந்தத் தொகுப்பின் ஒரு தனிச் சிறப்பு.

கோவை ஞானி, தமது முன்மொழியில் சொல்வது போல, கவிதைகளில் பாலைத்திணை தெரிகிறது. பாலைத்திணையிலும் அன்பு உண்டு உணர்வு உண்டு என்பதை நிலை நிறுத்துகிறார்.

"பம்பரம்' என்ற சிறிய கவிதை, ஒரு நூறு பக்க விஷயத்தை அடக்கமாகக் கூறுகிறது. பஸ்சில் ஏற முடியாதவனின் மன நிலையை மற்ற எல்லா நிலைகளிலும் செய்ய முடியாதவனின் மன நிலைக்கு ஒப்பிடலாம். இந்தக் கவிதையை ஆனந்த விகடன் முத்திரைக் கவிதைப் போட்டியில் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்ததில் வியப்பில்லை!

"சொல்லுங்கள் தேநீரகத்தில் ஊரில் மழை பெய்த செய்தி படித்து அழாமல் இருக்க முடியுமா?' நான் கடற்படையில் சேர்ந்திருந்த நேரத்தில் இதே மாதிரி வேறு ஒரு காரணத்திற்காக கண்ணீர் விட்டிருந்ததால் என்னால் இவ்வரியைப் பூரணமாக அனுபவிக்க முடிந்தது.

இன்றைய நிலைக்குப் பொருத்தமாக இருக்கிறது. "இந்தியக் கிரிக்கெட்டையுங்கூட பெய்ந்தும் கெடுக்கிறது. பெய்யாமலும் கெடுக்கிறது மழை'! இவ்வரிகளுக்குச் சமமாக உள்ளன "எண்ணெய் பிறப்பே காணாத தலையுடன் அபிநயம் பிடிக்கிறார்கள் சர்வதேச ஆட்டக்காரன் போஸ்' என்ற வரிகளும், ஏக்கம் தெரிந்தாலும் ஏமாற்றம் இல்லை!

தலைப்புக் கவிதையான "ஏலேய்' கவனிக்க வேண்டியது, சொல்லைப் பற்றி இவர் சொல்வது, பெரிய கவிஞர்கள், சொல்லைப் பற்றி எழுதிய கவிதைகள் எல்லாம் தாண்டி அண்டத்தை எல்லாம் தன்னுள் அடக்கியிருப்பது போலத் தோன்றுகிறது! "ஒலிக்கும் ஓரோர் கணத்திலும் ஒரு சொல் அன்பின் கர்ப்பம் தரிக்கிறது' இவ்வரிகள் சிறந்த சொல் நயமும் ஆழ்ந்த அர்த்தமும் கொண்டு, நம்மை ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கின்றன.

"ஒப்பாச்சி ஒப்பு சென்னால் விலா எலும்பு வேகாமலே எந்திரிச்சு நிற்கும் சவம்' ஒரு சவால் போலுள்ளது இந்தக் கவிதை!

வறுமையிலும், ஏழ்மையிலும், நம்பிக்கையிலும் நல்ல எண்ணங்களும் மடிந்து விடுவதில்லை என்பதற்கு இந்நூல் ஒரு உதாரணம். சாதாரண தமிழில், புரியும் படியான நல்ல கவிதைகளை இயற்ற முடியும் என்பதையும், விளம்பரமின்றி பல நல்ல தமிழ் கவிஞர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பதையும் வயதில் சிறியவராயினும் நினைப்பதில் பெரியவர்களாக இருக்கலாம் என்பதையும் ராமசாமி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். தமிழ் கூறும் நல்லுலகம் வரவேற்க வேண்டிய நூல். நேர்த்தியான முறையில் சிறந்த ஓவியங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள நூல். பதிப்பித்தவரும் பாராட்டப்பட வேண்டியவர்.