Tuesday, January 11, 2011
எனது பழைய வீடு
எனது பழைய வீடு
எனது பழைய வீட்டில்
ஆடிக்காற்றில் பறந்த ஓடுகள்
ஆகாயத்தின் சில வாசல்களை
எனக்குத் திறந்து விடும்
இரவில் பார்த்தால்
நிலவு தலைகீழாய்ச் சென்று
திகைக்க வைக்கும்
கோரைப்பாயில் படுத்து
நட்சத்திரங்களை எண்ணுகையில்
முதுகினடியில்
உறுத்திக்கொண்டிருக்கும்
ஆட்டாம் புழுக்கைகள்
சாரலென்றால்
சாணம் மணக்கும் தரையில்
முத்தங்களைப் பதிக்கும்
பெருமழையென்றால்
ஓட்டுத் தகரத்தில் கொட்டடித்து
அடிக்காதே என்று
கெஞ்ச வைத்து விடும்
வானவில்லென்றால்
தொடுகிற உயரத்தில்
வந்து நிற்கும்
மேகங்களை அண்ணாந்தால்
அவற்றின் உள்ளங்கால்களைக்
காட்டிச் செல்லும்
சூரிய ஒளிக் கோடுகள்
எனக்கொரு ஊஞ்சலைக்
கொண்டு வரும்
பொந்து எலிகள் என்னோடு
பாதிப் பகையும் பாதி சிநேகமும்
வளர்த்துத் திரியும்
அடிக்கடி வரும்
விருந்தினர்கள் என்றால்
பாம்புகளைச் சொல்ல வேண்டும்
தீடீர் விருந்தினர் என்றால்
வீட்டினுள் முளைத்த
தும்பைகளைச் சொல்ல வேண்டும்
மூதாதையரின்
ஒரு முகம் போலவோ
அநாதி காலத்தையும் தாண்டிய
ஒரு பெருமரம் போலவோ
எனது பழைய வீடு
என்னுள் உறைகிறது
எனது நிறம்
எனது பழைய வீட்டின் நிறம்
எனது வாசம்
எனது பழைய வீட்டின் வாசம்
எனது ஞாபகம்
எனது பழைய வீட்டின்
அடுப்பில் கனலும் கங்குகள்
எனது பழைய வீட்டினுள்
இருப்பதுவே
நான் விரும்பும் நாடு
வே..ராமசாமி
நன்றி
தை; இதழ் ஆறு 2011
நீலமணி சிறப்பிதழ்
Friday, January 7, 2011
மழை வேட்டல்
நின் உதடு
பெரிது
பிரபஞ்சம் முழுவதும்
முத்தமிட ஏதுவானது
இங்கே
விசும்பும் கணம் நோக்கி
வேர்முடிச்சுகளில்
கண்ணீர் வாங்கி
புழுங்கி அழுகிறதுநிலம்
வெப்பங்குடித்து
மேனி சுருங்கி
கிழவியாயின தாவர இலைகள்
நீர் வேட்கையில்
வியர்வைத்துவாரம்அடைந்து
நாற்றமெடுக்கிறது
மனிதர் குருதி
தகிக்கும்கதிரொளியில்
உன் நீர்மைத்துளிகளைக்கண்ணுற்று
கழுத்தை நெரித்துபெய்யச் சொல்ல
இயலாத நான் -
வாடிய புளியமரத்தடியில்
ஈரத்துணியாய்என்னை
கசக்கிப்பிழியுமுன்
நீபொழி
பேரோலமெடுத்து
முத்தமிடு!-
வே. ராமசாமி
Thursday, December 30, 2010
Tuesday, December 28, 2010
துடிப்பு
வற்றிய குளத்தின்
களிமண் சகதியில்
துள்ளித் துள்ளித் விழுவது
மீனின் துடிப்பா
குளத்தின் துடிப்பா?
வே.ராமசாமி
களிமண் சகதியில்
துள்ளித் துள்ளித் விழுவது
மீனின் துடிப்பா
குளத்தின் துடிப்பா?
வே.ராமசாமி
Subscribe to:
Comments (Atom)

