Sunday, April 18, 2010





காக்கைகளும் பிள்ளைகளும்

பிடிபடா பிரதி வேறுபாடு
கண்ணுக்குப் புலனாகும்
காக்கைக் கூட்டத்தில்

எருமைக் கொம்பில் நின்றதை
எறிந்து தள்ளியவனுக்கே
அன்றைய நாளின் மகுடத்தைச்
சூட்டுகின்றனர் தெருப்பிள்ளைகள்

கடலைப் பருப்பூன்றிய
செவக்காட்டுக்கும்
தானியங்கள் காய்கிற
தருணங்களுக்கும்
அகளை வீழ்த்துபவனே
அதிகாரியாகிறான்

தோதான கிளைதேடி
கவட்டை கண்டுபிடித்து
ரப்பர் இழுத்து
மண்டையில் தெறிப்பவர்களுக்கு
மனதில் நினைப்பு
மன்னாதி மன்னன்களாக

சோளக்கொல்லையில்
தொங்கவிடும் தேவைக்கு
எவரேனும் சொல்லிவிட்டாலோ
எமனின் கீரிடத்தை
எடுத்து மாட்டுகிறார்கள்
ஊரின் புத்திரர்கள்

கால்சட்டைப் பிராயத்தை
எட்டிப்பிடிக்காத
பொடியனுக்குமுண்டு
காகங்கொல்கிற கனவு

பெற்றவனழுது பின்தொடர
பிழைப்புக்கு இவர்கள்
பெருநகரம் போகிற
பின்னொரு பருவத்தில்

ஊரின் சுற்றுப்புறங்களில்
ஒலித்திருக்கும்
அவற்றின் குரல்கள்
எங்களுக்கிருப்பது
நிரந்தரக் கிளையென்று

******** ***********

மழைச் சகதியில்
யாரோ தவறவிட்ட
சிவப்பு கெட்ச்சைப்போல
ரத்தம் கக்கிச்
செத்தான் கவிஞன்

பிரேதப் பரிசோதனை
செய்துபார்த்த
மருத்துவர்கள் சொன்னார்கள்
அவன் நெஞ்சில்
புறக்கணிக்கப்பட்ட
கவிதையன்று
புற்றுக்கட்டி வளர்ந்திருந்தது

******** ***********

செம்புல நீர்

பூமியின் தேங்காய்க்குள்
குலுங்கிய செம்புல நீர்
புழுதிச் சாலைகளெல்லாம்
பூப்படைந்தன

புல்லின்
நெற்றிப்பொட்டிலும்
கள்ளிமுள்ளின்
கண்ணாம்பட்டையிலும்
எழுதப்பட்ட
ஒரே வண்ணம்

தென்னம் ஏணிப்படியில்
சில தப்படிகள் வர
ஏறித் தோற்ற நீரலை
பொன்புளியம்பூக்கள்
மரமிருக்க
தண்ணீர் தரையிருக்க
நிகழ்ந்ததொரு
மாயமகரந்தம்

கால்களுக்குக் கீழே
மண்ணரித்துச் செல்வதோ
செங்காட்டுத் தேவதைகளின்
உச்சிமுத்தம்

கரையின் வயிற்றில்
களவு செய்வது
முட்டிப் பால் குடிக்கும்
குட்டிகளின் வாஞ்சை

பந்துகளாகி மிதக்கும்
இலந்தைப் பழங்கள்
சிவப்பு ரத்தினக் கண்கள்

தொண்ட மிடறெடுத்து
விழுங்குதல்
என் அசுர வேட்கை

என்ன உலுக்கிய பின்தான்
இருக்கிறது
நெஞ்சின் மதகு திறந்து
வீறிட்டுப் பாய்கின்ற
வெள்ளமெல்லாம்

******** ***********

நொட்டாங்கை கருணை

வாழ்வோடு ஆழமாய்
வேர்பாவ முடியாமல்
போராடிப் போராடி
ஒரு தளிரெடுத்து
வைத்திருந்த அந்தச்
சின்னஞ் சிறு செடி

காப்பாற்றுகிறேன்
பேர்வழியென்று
மூன்றாம் மாடி மீதிருந்து
நீருற்றிய நும் கருணையில்
அதன்
குறையுயிரும் போன
ஐயன்மீர்
உச்சியடிந்து

******** ***********

தெற்கு

தெற்கு என்பது
திசைகளின் கணக்கில் வராது

கன்னிப் பூங் கொடி படர்ந்த
பொட்டல்புதர்களின் சூட்டச்
சூரியனும் தாங்காது

வேலி நெற்றுக்கள்
பிற நிலாக்களாய்ச்
சடத்த தேசம்
பொன்னளந்த பொழுதுகளை
ஊழியிலும் மறக்காது

சீமக் கருவேலமரத்தில்
சேர்ந்த நூலாம்படையிலும்
பார்த்தால்தான் தெரியும்
பனியின் நீர்மை

இமை முடிகள் நரத்தை
தாய்க்கிழவியின்
சொல்மொழிகளோ
கேள்வி கேட்கும்
பருவங்களை
நிறுத்திவைத்து

மலைகளைக் கொட்டிக்
கவிழ்த்தாலும் அடையாது
தென்பொருநையின்
ஊற்று நாவுகள்

பாட்டிலில் நதியும்
கொட்டிலில் திமிறும் கன்றும்
கிழிக்கத்தான் போகின்றன
கிழக்கின் திரைகளை

மோழ நெஞ்சங்களை
அறுத்தெறியக் கிளம்புகின்றன
கத்தாழக் கிழங்குகளின்
புதிய குத்துவாள்கள்

பாதித்தழைகள் காய்ந்து
மீதித் தழைகள் பொலிந்த
வேப்பமரத்தின் வீறு
புரியவே புரியாது
இந்தச் சொற்களில்
உங்களுக்கு

******** ***********
உறைப்பு

செம்மிளகாய்ச் சரங்கள்
காய்கின்ற முற்றத்தில்
அலகைக் கொத்தி
காரக் கெக்கெரிப்பில்
கிறுகிறுத்துச் சுற்றும்
செவலைக் கோழி

வாடிப்போன பூவின்
மகரந்தச் சூலில்
உறைப்புச் சுவை கண்டு
சுழித்துப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சி

அடுப்பிலே
குழலூதிக் குழலூதிக்
காந்திச் சிவந்து
கண்ணிமைகளும் தீயுமெனத்
தவிப்பாள் அம்மா

துரத்திய தேன்குளவி
புருவப்பட்டையில் கொட்டி
புடைக்க வைக்காதவரை
தேன்குளவியில் காரமிருப்பது
தெரியாது எனக்கு

கேப்பக் கூழ்
கரைத்து விட்டால்
உப்பு வத்தல் இல்லாமல்
ஒத்துழைக்க மறுக்கும்
நாவின் அரும்புகள்

பழைய சோற்றுக்கும்
பச்சை மிளகாய்க்கும்
இருப்பதுபோல்
பண்டப் பொருத்தம்
வராது வேறெதற்கும்

விதவிதமாய் எத்தனையோ
ருசிபேதம் இருந்தாலும்
உறைப்புக்கு ஒரே பழம்
இனிப்புக்கு மட்டமேனோ
பழங்கள் நூறு

விட கேட்டுப்போனால்
சொல்லவில்லை
வெட்டரிவாள் ஏந்திய
சுடலைமாடன்

அவன் பாவம்
எவ்வளவு காரந்தான்
சாப்பிட்டானோ
நாக்கத் தொங்கப்போட்டு
எனக்கேம் தெரியாதென்று
வெறித்திருக்கிறான் வெளிய

- வே.ராமசாமி

2 comments:

"உழவன்" "Uzhavan" said...

அத்தனையும் அருமை. புறா வாழ்வையும், கவட்டை பிடித்து அடிப்பதையும் மிக ரசித்தேன்.

வெட்டு 1 துண்டு 2 said...

http://vettuonnu.blogspot.com/2010/07/blog-post.html