Tuesday, January 11, 2011

எனது பழைய வீடு


எனது பழைய வீடு

எனது பழைய வீட்டில்
ஆடிக்காற்றில் பறந்த ஓடுகள்
ஆகாயத்தின் சில வாசல்களை
எனக்குத் திறந்து விடும்

இரவில் பார்த்தால்
நிலவு தலைகீழாய்ச் சென்று
திகைக்க வைக்கும்

கோரைப்பாயில் படுத்து
நட்சத்திரங்களை எண்ணுகையில்
முதுகினடியில்
உறுத்திக்கொண்டிருக்கும்
ஆட்டாம் புழுக்கைகள்

சாரலென்றால்
சாணம் மணக்கும் தரையில்
முத்தங்களைப் பதிக்கும்

பெருமழையென்றால்
ஓட்டுத் தகரத்தில் கொட்டடித்து
அடிக்காதே என்று
கெஞ்ச வைத்து விடும்

வானவில்லென்றால்
தொடுகிற உயரத்தில்
வந்து நிற்கும்

மேகங்களை அண்ணாந்தால்
அவற்றின் உள்ளங்கால்களைக்
காட்டிச் செல்லும்

சூரிய ஒளிக் கோடுகள்
எனக்கொரு ஊஞ்சலைக்
கொண்டு வரும்

பொந்து எலிகள் என்னோடு
பாதிப் பகையும் பாதி சிநேகமும்
வளர்த்துத் திரியும்

அடிக்கடி வரும்
விருந்தினர்கள் என்றால்
பாம்புகளைச் சொல்ல வேண்டும்

தீடீர் விருந்தினர் என்றால்
வீட்டினுள் முளைத்த
தும்பைகளைச் சொல்ல வேண்டும்

மூதாதையரின்
ஒரு முகம் போலவோ
அநாதி காலத்தையும் தாண்டிய
ஒரு பெருமரம் போலவோ
எனது பழைய வீடு
என்னுள் உறைகிறது

எனது நிறம்
எனது பழைய வீட்டின் நிறம்
எனது வாசம்
எனது பழைய வீட்டின் வாசம்
எனது ஞாபகம்
எனது பழைய வீட்டின்
அடுப்பில் கனலும் கங்குகள்
எனது பழைய வீட்டினுள்
இருப்பதுவே
நான் விரும்பும் நாடு

வே..ராமசாமி
நன்றி
தை; இதழ் ஆறு 2011
நீலமணி சிறப்பிதழ்

1 comment:

நேசமித்ரன் said...

மூதாதையரின்
ஒரு முகம் போலவோ
அநாதி காலத்தையும் தாண்டிய
ஒரு பெருமரம் போலவோ//

nice