Friday, January 14, 2011

பசுவும் அம்மாவும்

பசுவும் அம்மாவும்

எத்தனை மாதம் கழித்துப் போனாலும்
பசுவுக்குத் தண்ணிகாட்டி விட்டுத்தான்
நமக்குச் சோறு வைக்கிறாள்

ஆட்டு உரலில் நக்கிய வாய்மட்டி காயாமல்
பெருமூச்சில் அது பீய்ச்சியடிக்கும்
தவிட்டுத் துளிகளில் நனைந்தாலும்
செல்லமாகத்தான் தட்டுகிறாள் மன்னையில்

வந்திருக்கிறானே என வீடிராமல்
வால்போல் மூக்கணாங் கயிறிழுத்து
காட்டில் அவளின் அன்றையத் தடங்களைப்
பதிக்காமல் திரும்பமாட்டாள்
மாலைவரை

அச்சுவெல்லத் தேநீராற்றுகையிலும்
சிணுக்கோலியில் தன் கூந்தல் நீவுகையிலும்
பசுவின் காம்பாகத்தான்
பயன்படுத்துகிறாள் விரல்களை

புறப்படும் தேதிசொல்லிக் கலங்கடித்தால்
அதன்குரல் கேட்கும் வரைதான் எல்லாம்

எப்படி முயன்றாலும் முடியாது
ஒரு பசுவும்கன்றும் இருக்கும் வீட்டில்
அம்மாவுக்குச் செல்லப்பிள்ளையாக

வே.ராமசாமி
"கிணற்றுக்குள் முளைத்த மருதாணி "என்ற எனது தொகுப்பிலிருந்து

1 comment:

நம்பிக்கைபாண்டியன் said...

வாவ்... கலக்கீட்டிங்க ராமசாமி! கிராமத்து நிஜம் இது, பலவீடுகளில் பார்த்திருக்கிறேன்,